நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் லஞ்சம்... லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்...

நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் காட்பாடி சோதனைச்சாவடி ஊழியர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் லஞ்சம்... லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்...

சேலம் மாவட்டம் திருவாச்சூர் கிராமத்தை சேர்ந்த விஜய் குமரேசன், நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும்போது, வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் வாகனத்திற்கு பெர்மிட் வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா 500 ரூபாய் என சோதனைச் சாவடி ஊழியர் 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அந்த பணத்தை ஊழியரிடம் கொடுக்கும்போது, விஜய் குமரேசன் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செல்லும்போது, காட்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், விஜய் குமரேசனை மடக்கி பிடித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு நெல் அறுவடை இயந்திர தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் கோபம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சோதனை சாவடியில் ஒரு வாகனத்திற்கு 500 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்றும், தமக்கு கொடுக்க கசக்கிறதா எனவும் கேட்டுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் பணத்தை கொடுத்து விட்டு ஆந்திராவிற்கு சென்று விட்டனர்.

லஞ்சம் வாங்கிய வீடியோக்கள் பல்வேறு இடங்களில் வைரலான நிலையில், நெல் அறுவடை இயந்திர தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.