காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...!

செஞ்சி அருகே விசாரணைக்காக அழைத்து வந்த ஒருவர், சிறுநீர் கழிப்பதாக கூறி காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கீழ்செவாலாம்வாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த பெண்ணின் தாய் மீனாட்சி, செஞ்சி அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (65), அவரது மகன் வெங்கடேசன் (36), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமலிங்கம் (68) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில், அழைத்துச் சென்றனர். அப்போது வெங்கடேசன் என்பவர், சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன் கூலி வேலை செய்து வந்த நிலையில், இரண்டு மகன்கள் உள்ளனர். வெங்கடேசனின் தந்தையான சம்பத் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் சம்பத்தை கைது செய்தனர். மேலும் அவருடைய மகன் வெங்கடேசனை வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு பயந்தும், அவமானம் தாங்க முடியாமலும் தான்  வெங்கடேசன் பாதி வழியில் காவல் வாகனத்தில்  இருந்து தப்பித்து வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வெங்கடேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்து வெங்கடேசன் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அப்படி நீதி கிடைக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் சூரப்பந்தாங்கல் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.