பாசி நிதி நிறுவனம் விவகாரம்: ஐ.ஜி. பிரமோத் குமார் மனு இன்று விசாரணை!

திருப்பூர் பாசி நிதி நிறுவன பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஐ.ஜி. பிரமோத் குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் பொது மக்களின் பணம் 930 கோடியை மோசடி செய்தது. இந்த வழக்கில் பாசி நிதி நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது   சிபிஐ கடந்த 2011 ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.ஜி பிரமோத் குமார் உட்பட  5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுடன், குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றசாட்டுகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஐ.ஜி பிரமோத் குமார் தரப்பில் கடந்த வாரம்  கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான  விசாரணை கோவை  சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, கூடுதல் பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஐ.ஜி. பிரமோத் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 
ஒரு வார கால அவகாசம் என்பதை மறுத்த நீதிபதி, நாளை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை  நாளைக்கு  ஒத்திவைத்தார்.