ஆன்லைன் சூதாட்ட புக்கிங்... பல லட்சம் ஏமாற்றிய மோசடி நபர் கைது...

கிரிக்கெட் விளையாட்டு புக்கிங்காக செயல்பட்டு பல லட்சம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட புக்கிங்... பல லட்சம் ஏமாற்றிய மோசடி நபர் கைது...

சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெட்டிங்கிற்காக பணத்தை கட்டி சுமார் 87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது தெரிய வந்தது.

இதனடிப்படையில் பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மகாபலிபுரத்தில் தனியார் ஹோட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்து அந்த நபரை கைது செய்தனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும் ஹரிகிருஷ்ணன் தனது தந்தையின் மறைவிற்கு பிறகு அவரது ஆன்லைன் சூதாட்ட புக்கிங் தொழிலையே கையில் எடுத்தது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு மேட்ச் பெட்டிங்கிலும் புக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், 24,68,300 பணம், 6கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள்,1 ஐபேட், 1லேப்டாப் மற்றும் குற்றசெயலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.