திருட வந்த இடத்தில் தில்லாலங்கடி வேலை காட்டிய மர்ம ஆசாமிகள்..! இருந்தாலும் இவ்ளோ சேட்டை ஆகாது..!

திருட வந்த இடத்தில் தில்லாலங்கடி வேலை காட்டிய மர்ம  ஆசாமிகள்..!  இருந்தாலும் இவ்ளோ சேட்டை ஆகாது..!

சிவகாசி அருகே கொள்ளையடிக்க சென்ற மர்ம ஆசாமிகள், சப்பாத்தி சுட்டு சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ் - கிருஷ்ணகுமாரி தம்பதி. இவர்களுக்கு ஜெயராஜா, ஸ்ரீராம் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அனைவரும் சேர்ந்து அய்யம்பட்டி ரெயில்வே கேட் அருகே நெல்லை ராஜா ஸ்டோர் என்ற பெயரில் மளிகைக் கடையை நடத்தி வருகின்றனர். அதோடு பேக்கரியும், கடையின் பின்புறம் இரவு நேர உணவு விடுதியும் நடத்தி வந்த ஆனந்தராஜ், கடையில் பத்துக்கும் மேற்பட்டோரை வேலைக்கு வைத்திருந்தார். 

நாள்தோறும் கடையை 10 மணிக்கு பூட்டி விட்டு வீடு திரும்புபவர்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் வீட்டில் இருந்தே கவனித்து வருவார்கள். இந்த நிலையில் 5-ம் தேதியன்று கடையை திறந்த ஆனந்தராஜூக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. 

மளிகைக் கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனதுடன், கடையே சின்னா பின்னமாக சிதறிக் கிடந்தது. இதையடுத்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விரைந்த சிவகாசி போலீசார் கடையில் இருந்த 28 சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இந்த கேமராவில் வித்தியாசமான ஒரு காட்சி பதிவாகியிருந்தது. முகத்தை மூடியவாறே மளிகைக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், கல்லாவை திறந்து பணத்தை எண்ணி எண்ணி கொண்டு வந்து பைக்குள் சொருகினர்.

மேலும் மளிகைக் கடையில் இருந்த மிக்சர், சாக்லேட், காரசேவு போன்ற தின்பண்டங்களையும் வாயில் அள்ளி போட்டு ருசி பார்த்தனர். இதுமட்டுமல்லாமல் ஆனந்தராஜின் உணவு விடுதி வளாகத்திற்குள் சென்றவர்கள், சப்பாத்தி சுட்டு சாப்பிடத் தொடங்கினர். திருட வந்ததையே மறந்து திருவிழாவுக்கு வந்தவர்கள் போல ஆற அமர தங்கள் வேலைகளை முடித்த தில்லாலங்கடி ஆசாமிகள் கடைசியில் கூல்டிரிங்சோடு முடித்து விட்டு கிளம்பினர். 

இந்த சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்த போலீசார், ஏ.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரன், வீரமணி உள்பட மூன்று பேரை கைது செய்தனர். ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் கைதான மூவரும் ஆனந்தராஜின் கடையை ஆட்டையைப் போட முயன்றது கண்டறியப்பட்டது. 

இதையும் படிக்க      | கோவில் அன்னதானம் எனக் கூறி, அரிசி மூட்டைகளை திருடிய மர்ம ஆசாமி!