அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 20 இடங்களில் ஐ.டி. ரெய்டு...!

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 20 இடங்களில் காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை சுமார் 8 மணி நேரமாக நீடித்து வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 20 இடங்களில் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் அருணை கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கோவையில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் வந்த அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்! - ராமதாஸ்

கரூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் உள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. விழுப்புரத்திலும் அமைச்சர் ஏ.வ வேலுவின் நண்பர் வீட்டில் சோதனை நீடிக்கிறது. எ.வ.வேலுவின் நண்பரான பிரேம்நாத்துக்கு  சொந்தமான மார்பிள் கடை, தங்கும் விடுதியில் சோதனை நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் , தற்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு  சொந்தமான இடங்களில்  வருமான வரித்துறை சோதனை  நடந்து வருவது, திமுகவினரிடையே கலக்கத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.