கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

நீட் தேர்வை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை 3 நாள்கள் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி போலீசார் மனு அளித்தனர்.
 
3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் சந்தோஷ் 3 கருக்கா வினோத்தை நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளார். முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்கு கருக்கா வினோத் வரும்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மற்றும் 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை காரணமாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியும் கோஷங்களை எழுப்பினார். போலீஸ் காவல் அனுமதி அளித்ததை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே மீண்டும் கருக்கா வினோத் கோசம் எழுப்பினார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கருக்கா வினோத்தை வெளியே அழைத்து வந்த போது தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என கருக்கா வினோத் கோசமிட்டார். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: புழல் கைதியின் உயிரிழப்புக்கு, சிறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம்?