நூற்பாலையை விற்பனை செய்வதாக மோசடி.. ஈரோட்டில் தொழிலதிபர் மீது புகார்...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்,  நூற்பாலையை விற்பனை செய்வதாக கூறி 1 கோடி ரூபாய் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக, தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விணாரணைக்காக வந்தவர் தப்பி சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. 

நூற்பாலையை விற்பனை செய்வதாக மோசடி.. ஈரோட்டில் தொழிலதிபர் மீது புகார்...

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு சொந்தமான  நூற்பாலை மற்றும் 1 ஏக்கர் 17 சென்ட் நிலத்தை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பேசி முடித்து மொடச்சூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரிடம் கடந்த 2019 ம் ஆண்டில் 1 கோடி ரூபாய் முன்பணம் பெற்றுள்ளனர்.

வங்கியில் உள்ள கடனை ஈடு செய்து தடையில்லா சான்று (NOC) பெற்ற பின் ஆலையை கிரையம் செய்து தருவதாக கூறி உள்ளனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆலையை வேறொருவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய் பணத்தையும் தராமல் மிரட்டல் விடுத்ததால், பாதிக்கப்பட்ட மகேஷ்வரன் 2019 ல் போலீசில் புகார் அளித்தார்.

அதன் மீது  நடவடிக்கை இல்லாததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு பதிவு செய்வதற்கான உத்தரவை பெற்றார். இதன் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகேசன் மற்றும் ஜோதி இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முருகேசன்  வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து மாவட்ட குற்ற பிரிவு காவல் நிலையத்தில் இருந்து தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

கைது செய்யும் முன்பாக போலீசாரே இருவரையும் தப்ப விட்டதாக மகேந்திரன் குற்றம் சாட்டினார். 2019 ல் புகார் அளித்த போதே அதிமுக.வில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்யவிடாமல் தடுத்ததாகவும், நீதிமன்ற வழிகாட்டுதல் படி தற்போது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.