ரூ. 800 கோடி மதிப்புடைய நான்கரை ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

சென்னை கத்திப்பாரா அருகில் 800 கோடி ரூபாய் மதிப்புடைய நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

பல்லாவரம் வட்டம் புனித தோமையார் மலை கிராமம் 437 சர்வே நம்பர் உள்ள சுமார் நான்கரை ஏக்கர்  நிலம் வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்டுவந்தன. குத்தகைக்கு  இடத்தை பெற்று பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இதுவரையில் எந்த விதமான குத்தகை பணமோ வாடகையோ தராததால் அரசுக்கு சொந்தமான இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்ததாக, அதனை அகற்றி அரசிடம் ஒப்படைக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்தார். 

அதன் அடிப்படையில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு நிலத்தில் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த அனைத்து வளாகங்களுக்கும் சீல் வைத்து, அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளார்.

இதனால்  40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த கிறித்தவ மதப் பிரச்சார கூடம் வீடுகள் உள்பட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும்  சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்டிடங்களின் ஒரு பகுதி மற்றும் பெயர் பலகைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடம் சுமார் 800 கோடி மதிப்பு என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதே போல் பல்லாவரம் வட்டத்திற்குட்பட்ட கத்திப்பாரா புனித தோமையார் மலை கிராமம் பகுதிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் இதே போன்று ஆக்கிரமிப்பு பகுதிகளை தனியாரிடமிருந்து  மீட்டு அசுடமையாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.