"ஆர்டர் பண்ணா நம்ம வீட்டுக்கே தேடி வரும்ங்க பட்டாசு"... விளம்பரத்திற்கு பின் ஒளிந்திருக்கும் மோசடி!

"ஆர்டர் பண்ணா நம்ம வீட்டுக்கே தேடி வரும்ங்க பட்டாசு"... விளம்பரத்திற்கு பின் ஒளிந்திருக்கும் மோசடி!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் குறைந்த விலைக்கு பட்டாசு தருவதாக மர்மகும்பல் மோசடியில் இறங்கியிருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி என்றால் பட்டாசு என்பது மக்களிடையே காலங்காலமாக உள்ள வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் பட்டாசு வெடித்து உற்சாகமடைந்து வருகின்றனர். பட்டாசால் காற்று மாசு படுகிறது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையே இந்த ஒரு நாளை நம்பியே உள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வியாபாராம் ஜோராக நடைபெறும் நிலையில் ஆன்லைனில் மோசடி நடப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார். 

யூ-டியூப் போன்ற தளங்களின் மூலமாக சில மர்மகும்பல், நம்ப முடியாத விலையில் பட்டாசு கிடைக்கும் என போலி அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள், அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்து அவர்கள் அளித்த இணையதளத்தில் சென்று பட்டாசுகளை ஆர்டர் செய்கின்றனர். 

இதையடுத்து பணம் செலுத்தப்பட்டவுடன் ஆர்டர் செய்த இணையதளமுகவரியை மீண்டும் அணுக முடியாமல் போகிறது. இதே பாணியில் கடந்த ஒரு மாதம் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற கும்பல் பொதுமக்களை அணுகினால், கட்டணமில்லா உதவி எண் 1930-க்கு போன் செய்யலாம் என்றும், அல்லது  www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பட்டாசுக்காக செலவழிக்கும் மக்கள், இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து விலகியே இருக்கலாம் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.