அரசு நிலத்தை தனியாரிடம் வழங்கிய வழக்கு...2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்....

பெரியகுளத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அரசு நிலத்தை தனியாரிடம் வழங்கிய வழக்கு...2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்....

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தியதில் பெரியகுளத்தை சுற்றி 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றுள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.

மேலும் இந்த நிலங்களில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிமங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது இதுகுறித்து அளவீடு செய்த கனிம வளத்துறை முதல்கட்டமாக 4 புள்ளி 3 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அறிக்கை அளித்துள்ளது.

இதற்கு 15 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் மாற்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற அவர் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.