மின்வாரிய துறையில் வேலை... 28 பேரிடம் அசால்டாக 83 லட்சத்தை சுருட்டிய பெண்!!

மின்வாரிய துறையில் வேலை... 28 பேரிடம் அசால்டாக 83 லட்சத்தை சுருட்டிய பெண்!!

சென்னை அடுத்த பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்-மலர் தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். 

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த புனிதா என்பவருடன் ஒரே அலுவலகத்தில் சந்தோஷ்குமார் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சந்தோஷ்குமார் புனிதாவை தற்செயலாக சந்தித்துள்ளார்..

அப்போது புனிதா, தான் திருமுடிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிவதாக சந்தோஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். பழைய நண்பர்களான இருவரும் அவ்வப்போது பேசும்போது புனிதா மின்சார துறை சார்ந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் புனிதா மற்றும் சந்தோஷ்குமார் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சந்தோஷ் குமாரின் மனைவி மலர் நீண்ட நாட்களாக பணி தேடி வருவதாகவும், வேலை கிடைக்கவில்லை எனவும் புனிதாவிடம் கூறியுள்ளார். 

அப்பொழுது புனிதா எதற்கு வெளியில் வேலை தேடுகிறீர்கள் மின்சார துறையில் வேலை உள்ளது பணம் கட்டினால் போதும் வேலை கிடைத்து விடும் என்று கூறிய புனிதா, சந்தோஷ் குமாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எனது கணவரும் பணம் கட்டி தான் மின்சாரத் துறையில் சேர்ந்ததாகவும், தந்தை சகோதரர் ஆகியோர் மின்சார அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தானும் வறுமையில் இருந்ததாகவும் கடன் வாங்கி பணத்தை கொடுத்து மின்சாரத் துறையில் வேலைக்கு சேர்ந்ததாகும் தற்போது மாதம் 40-ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். 

தனது கனவரும் அதே திருமுடிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணிபுறிவதாகவும் எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். மனைவிக்கு அரசு வேலை என்ற கனவில் மிதந்த சந்தோஷ் குமாரிடம் நீங்களும் மூன்று லட்சம் பணத்தை கொடுத்தால் உங்கள் மனைவிக்கு மின்சாரத் துறையில் தற்காலிக பணியாளராக வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு மாதம் 27-ஆயிரம் சம்பளம் வரும் என்றும் மூன்று வருடத்திற்கு பிறகு நிரந்தர பணியாளராக பணி நியமனம் செய்யப்படும் அதன் பின்பு மாதம் 40-ஆயிரம் வரை சம்பளம் வரும் எனவும் ஆசை என்ற வலையை அளவில்லாமல் வீசியுள்ளார். 

தன் மனைவிக்கு பணம் கொடுத்து வேலையில் சேர்க்கும் எண்ணம் தமக்கு இல்லை என புனிதாவிடம் சந்தோஷ்குமார் தெரிவித்ததால் புனிதா சந்தோஷ்குமாரிடம் உங்கள் குடும்பம் கஷ்டம் வேலையில் சேர்ந்தவுடன் சரியாகிவிடும் என புனிதா மூளைச்சலவை செய்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக சகோதரி போன்று பழகிய புனிதாவின் வார்த்தைகளை நம்பிய சந்தோஷ்குமார் அவரது மனைவியை புனிதாவுடன் சந்திக்க வைக்க நேரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது புனிதா தான் பையில் வைத்திருந்த போலியான கிளார்க் அடையாள அட்டையை காண்பித்து கணவன் மனைவி இருவரையும் நம்ப வைத்து, நேரடியாக திருமுடிவாக்கம் மின்சார அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து சென்று அவர்கள் முன்னிலையில் உள்ளே செல்வதும், வெளியே வருவதும் என தன்னால் தான் மின்சார துறை அலுவலகமே இயங்குவது போன்ற தோரணை காண்பித்துள்ளார் என்று கூறினார்.

இதையெல்லாம் உண்மை என நம்பிய சந்தோஷ் குமார்-மலர் தம்பதியினர் அவர்களிடம் இருந்த தங்க நகை, வாகனம் என உள்ளிட்ட பொருட்களை விற்று ரூபாய் மூன்று லட்சத்தை புனிதவிடம் மின்சார துறையில் வேலை வாங்கி தருவதற்காக கொடுத்துள்ளனர். 

நாட்கள் கடந்த பின்பு சந்தோஷ்குமார் வேலை வாங்கி தருவதாக கூறியது சம்பந்தமாக புனிதாவிடம் கேட்டதற்கு உங்கள் மனைவிக்கு வேலை ரெடியாகி விட்டது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.  மின்சாரத் துறையில் பல்வேறு இடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் நீங்கள் பத்து பேரை சேர்த்து விட்டால் அனைவருக்கும் ஒரே ஆர்டரில் வேலை கொடுத்து விடுவார்கள் என புனிதா கூறியதாக கூறப்படுகிறது. 

தற்பொழுது உங்கள் மனைவி மட்டுமே சேர்ந்துள்ளார் மீதம் ஒன்பது பணி ஆணைகள் அப்படியே உள்ளது எனவே இன்னும் 9 பேரை சேர்த்தால் பத்து நபர்களுக்கும் மொத்தமாக பணி ஆணை கிடைத்துவிடும் என கூறியதாக தெரிவித்தனர். 

கோவமடைந்த சந்தோஷ் மலர் தம்பதியினர் வேறு வழியில்லாமல் வீட்டருகில் உள்ளவர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் என நான்கு நபர்களை சேர்த்துள்ளனர். ஒரு நபருக்கு 3-லட்சம் வீதம் 14-லட்சம் (ஒரு லட்சம் குறைவாக புனிதாவிடம் கொடுத்துள்ளனர்). 

நாட்கள் கடந்த பின்பு வேலையை பற்றி கேட்டபோது  உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஜூலை மாத  இறுதியில் பணி ஆணை வந்து விடும் எனக் கூறியுள்ளனர் என்றும் இன்னும் பல இடங்களில் பணி காலியாக உள்ளதாகவும் உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

தங்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் சந்தோஷ்குமார் மலர் தம்பதியினர் வீட்டருகில் இருந்த நீலா பாஸ்கர் என்பவர் மூலம் 7-நபர்களிடம் 21-லட்சமும், நீலா பாஸ்கரின் நண்பர் பாலசுப்ரமணியன் என்பவர் மூலம் 16-நபர்கள் என 28 பேர் இணைந்து மொத்தம் 83-லட்சத்தை புனிதாவின் வங்கி கணக்கில் 12-லட்சமும், 71-லட்சம் ரொக்க பணமாக புனிதாவின் கையிலும் கொடுத்ததாக தெரிவித்தனர். 

ஒருமுறை புனிதாவிடம் கட்டு கட்டாக பணம் கொடுப்பதையும் அதை புனிதா கை பையில் வாங்கி வைப்பதையும் பணம் கொடுப்பவர்கள் தங்களது செல்போனில் ஆதாரமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்பொழுது புனிதாவின் போலியான அடையாள அட்டையை முன் வைத்து வீடியோ பதிவு செய்துள்ளனர். 

மேலும் நாட்கள் செல்ல செல்ல பணி ஆணை வராததால் புனிதாவிடம் பணம் கொடுத்தவர்கள் பணி ஆணை குறித்து கேட்டபோது பணி ஆணை தபால் மூலம் வரும் என தெரிவித்துள்ளார் புனிதா. 

சில நாட்கள் கழித்து தபால் மூலம் பணி ஆணை வராததால் மீண்டும் புனிதவை தொடர்பு கொண்டு கேட்டபோது தபாலில் அனுப்புவது சம்பந்தமாக கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவரவர் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.  

பணம் கொடுத்தவர்கள் நாள் ஒன்றுக்கு பணி ஆணை குறுஞ்செய்தியாக வந்ததா வந்ததா என அவர்களது செல்பினையே பார்த்து பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம், கோபத்தின் உச்ச கட்டத்திற்கு சென்ற பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணி ஆணை குறித்து புனிதவிடம் கேட்டபோது கோடம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ரெவென்யூ சூப்பர்வைசர் ராஜவேலு மற்றும் பணி ஓய்வு பெற்ற ஃபோர் மேன் நடராஜன் ஆகியோர்  தற்போது ஊரில் இல்லை எனவும் அவர்களது மொபைல் சுவிட்ச் ஆப்பில் உள்ளதாகவும் கூறிய புனிதா அவர்கள் வந்த பின்னரே உங்கள் பணிக்கான முழுமையான தகவல் தெரியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. 

ஆத்திரமடைந்த வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் புனிதாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று அக்கம் பக்கத்தில்  விசாரித்தபோது புனிதா சில மாதங்களில் ஃப்ரிட்ஜ், கட்டில், பீரோ போன்ற வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்களை புதிதாக வாங்கியதும், புதிதாக 50 சவரன் தங்க நகை, கணவர் பார்த்திபன் பெயரில் 600 சதுர அடி காலி மனை வாங்கி உள்ளதாகவும், ஐந்து கரவை மாடுகள் வாங்கியதும், புனிதாவின் தம்பிக்கு புதிதாக அழகு நிலையம் அமைத்துக் கொடுத்து என மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அக்கம் பக்கத்தினர் மூலம் தெரிந்து கொண்டனர்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ந்து போன பணம் கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றபட்டதை உணர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

இதை அடுத்து திருமுடிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் புனிதவை பற்றி விசாரித்தபோது புனிதா என்பவர்  கிளர்க்காக பணி புரியவில்லை என்றும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரிந்து கொண்டனர். 

தாங்கள் பணம் கொடுத்து ஏமர்ந்ததை உணர்ந்த பாதிக்கப்பட்டோர் கடந்த 01.08.2023. அன்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் புனிதா பார்த்திபன் தம்பதியினர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். 

தன் மீது புகார் அளித்ததை அறிந்த புனிதா சந்தோஷ்குமாரை நேரில் சந்தித்து 20-லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி 63 லட்சம் பணம் குறித்து கேட்டபோது 11.09.2023-அன்று மீதி பணத்தை மொத்தமாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புனிதா கூறியபடி பணம் தராததால் பாதிக்கப்பட்டோர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.