இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து பணம் பறித்த கும்பல்....3 பேரை கைது செய்த போலீஸ்...!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து பணம் பறித்த கும்பல்....3 பேரை கைது செய்த போலீஸ்...!

சென்னை வானகரம் ஓடை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். தினேஷ் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது நிறுவனத்தின் வசூல் பணம் 5 லட்சத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், தினேஷை மடக்கி அவர் பையில் இருந்த வசூல் பணம் 5 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றனர். பணத்தை பறிகொடுத்த தினேஷ், இது தொடர்பாக மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

குறிப்பாக இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளியின் உருவம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் எண் பதிவானது. அதனடிப்படையில் விசாரித்த போலீசார், வழிப்பறி சம்பவத்தின் ஈடுபட்ட சதீஷ்குமார், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தினேஷ் வசூல் செய்து எடுத்த வந்த பணத்தை, எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமணி என்பவர், சதிஷ்குமார் மற்றும் முத்தையா ஆகிய இருவரிடமும் கூறி அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுப்பிரமணி என்பவரையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 3 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஸ்குமார், முத்தையா, சுப்பிரமணி ஆகிய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.