நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் : கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை!!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் : கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை!!

மேலூர் அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சத்தியபுரம் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோபி. வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தவர் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார். இவரது வீடு சத்தியபுரம் ஊரின் கடைசியில் வயல் வெளியின் அருகில் உள்ளது.  நேற்று இரவு வீட்டில் கோபி. இவரது மனைவி கெளசல்யா மற்றும் கோபியின் தாயார் இந்திரா, கோபியின் அக்கா இந்து மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் முகமூடி அணிந்திருந்த நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் வெளிக்கதவின் பூட்டை கடப்பாறையால் அடித்து உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தனித் தனி அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அரிவாள், கத்தி, கடப்பாறை, உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி இந்திரா, மற்றும் கெளசல்யா கழுத்தில் கிடந்த தங்க நகைகள் மற்றும் பீரோவை கடப்பாறை கொண்டு  உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் என மொத்தம் 75 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு அனைவரையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து அறையின் கதவை திறந்ததையடுத்து வெளியில் வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஏ.டிஎஸ்.பி., சந்திர மெளலி, டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சார்லஸ், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பிச்சை, சார்பு ஆய்வாளர் சுதன்,தனிப்பிரிவு முத்துக்குமார், ராஜா உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கபட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களை கேகரித்து சென்றனர். வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் அப்பகுதியில் பதிவான  தடயங்களை வைத்து கொள்ளையர்களை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமப் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.