சென்னை விமான நிலையத்தில் 1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புடைய 1 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கடத்தி வரப்படும் தங்க கட்டிகள் விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவியுடன்  சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு செல்லப்பட்டு கடத்தல் ஆசாமிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

ஒரு விமானத்தில் வந்து விட்டு மற்றொரு விமானத்தில் புறப்பட்டு செல்ல உள்ள மாற்று பாதை அருகே உள்ள கழிவறையில் கடத்தல் தங்கம் கைமாறுவதாக   ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளைப் போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அருள் பிரகாசம் (32) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது அவரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அவருடைய உள்ளாடைக்குள் சுமார் 1 கிலோ 800 கிராம் எடை உடைய தங்க கட்டிகள் இருந்ததை கண்டு பிடித்தனர். பின்னர் அருள் பிரகாசத்தை வெளியில் விடாமல் விமான நிலைய சுங்க இலாகா  அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு பயணி கடத்தல் தங்கத்தை டிரான்சிஸ்ட் பகுதியில் உள்ள கழிவறையில் வைத்து தந்தார். இந்த தங்கத்தை வெளியே உள்ள நபரிடம் தந்தால் ரூ.1 லட்சம் தருவார் என கூறினார்.  ஆனால் ஒப்பந்த ஊழியர் தந்த தகவலின் அந்த நபரை தேடிய போது கொழும்பு விமானத்தில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அருள் பிரகாசத்திடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை விமான நிலையத்தில் அக்டோபார் மாதத்தில் மட்டும் சுமார் 12 கிலோ  கடத்தல் தங்க கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கடத்தலின் பின்னணியில் சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களும் இருப்பதும் சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: "கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!