திமுகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்..! கொங்குவில் இருந்து தானா வந்து விழுந்த விக்கெட்..!

திமுகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்..! கொங்குவில் இருந்து தானா வந்து விழுந்த விக்கெட்..!
முன்னாள் அதிமுக அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
எளிய தொண்டராக அ.தி.மு.கவில் தனது பணிகளைத் துவங்கிய தோப்பு வெங்கடாசலத்தின் வளர்ச்சி என்பது அபரிவிதாமனது என்றே சொல்லலாம். தோப்புப்பாளையம் கிளை செயலராக அதிமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் பெருந்துறை நகரச் செயலராகவும், பெருந்துறை தாலுகாவின் அண்ணா தொழிற்சங்க செயலராகவும் படிப்படியாக உயர்ந்தவர். பிறகு ஈரோடு புறநகர் மாவட்டத்தின் ஜெயலலிதா பேரவையின் செயலராக உயர்ந்த தோப்பு வெங்கடாசலம், 2010-ல் அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலராகவும் இருந்தார். 
பின்பு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு அளித்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில், 40,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றா பிறகு, வருவாய்த்துறை, சுற்றுச்சுழுல் துறை அமைச்சர் என உயர்பதவிகள் தேடி வர ஆரம்பித்தன. மீண்டும் 2016-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாசலத்திற்கு அமைச்சரவையில் பதவி மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அதே மாவட்டத்தை சேர்ந்த கே.சி.கருப்பணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 
 
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் கூட, வெங்கடாசலம் ஓரங்கட்டப்பட்டார். புதிதாக அமையப்பெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் வெங்கடாசலம் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அப்போதே அதிமுக தலைமையின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் தோப்பு வெங்கடாசலம். அதன் பிறகு திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது, கருப்பணனும், தோப்பு வெங்கடாசலமும் பெருந்துறை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தோப்பு வெங்கடாசலம் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை தவிர்த்து, சூலூர் தொகுதியில் சென்று பணியாற்றிவந்தார். அப்போது கே.சி.கருப்பணன் தேர்தல் பணிகளில் ஒழுங்காக ஈடுபடவில்லை என செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம் சாட்டினார். இதற்கு கே.சி.கருப்பணன் தனது அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை வெங்கடாசலம் குறி வைப்பதாக பதிலடி கொடுத்தார். 
அதன் பிறகு தான் வகித்து வந்த அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியிலிருந்து திடீரென விலகினார் வெங்கடாசலம். கே.சி.கருப்பணன் உடன் ஏற்பட்ட மோதலால் தான் அவர் இந்த முடிவை எடுத்தார் என அப்போதிய அதிமுக வட்டாரங்கள் முணுமுணுத்தனர். இருப்பினும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், அதிமுகவின் அடிப்படை தொண்டனாக எப்போதும் இருப்பேன் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார். 
தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனையடுத்து யாரும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் எனக் கூறி தனித்து சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவிய அவரை, கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இதனால் மேலும் மேலும் அதிருப்தியடைந்து உச்சபட்ச கோபத்திற்கு சென்ற தோப்பு வெங்கடாசலம், சில நாட்களின் யோசனை, அமைதி, ஓய்வுக்கு பிறகு தற்போது திமுகவில் இணைகிறார். தனது ஆதரவாளர்கள் சுமார் 300-பேருடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.