பிரிக்கப்படுமா தமிழ்நாடு.? பாஜகவின் கொங்குநாடு கோரிக்கையின் பின்னணி என்ன.? 

பிரிக்கப்படுமா தமிழ்நாடு.? பாஜகவின் கொங்குநாடு கோரிக்கையின் பின்னணி என்ன.? 

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது விவர குறிப்பேட்டில் கொங்கு நாடு, தமிழ்நாடு என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே எல்.முருகன் இப்படி சொன்னார் என்று சொல்லப்பட்டது. 

ஆனால், தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும் கொங்கு பகுதியை தனியே பிரித்து அதை ஒன்றிய பகுதியாகலாம் என்ற எண்ணம் பாஜக மேலிடத்திற்கு இருக்கிறது என்றும், அதற்கான சமிஞ்சையே எல்.முருகன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆரம்பகால திட்டமே மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்காமல் நிர்வாக ரீதியாக பிரிக்கவேண்டும் என்பதே. ஒருவேளை மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் அது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று கூறி மொழிவாரி மாநிலங்கள் உருவாவதை ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தே வந்துள்ளது.  

அதைத்தான் தற்போது பாஜக செயல்படுத்தி வருகிறது. மொழி வாரி மாநிலங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரித்தால் மாநில ஒற்றுமை என்பது இல்லாமல் போய் விடும். மேலும் சிறிய மாநிலங்களால் தனித்து இயங்கமுடியாத நிலையில், அனைத்திற்கும் ஒன்றிய அரசையே சார்ந்திருக்க நேரிடும். இதன் காரணமாக தான் மொழிவாரி மாநிலங்களை தனிதனியாக பிரிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.அதன் முதல் படியே இந்த கொங்கு மண்டலம் என்று கோரிக்கை. 

மேலும், கொங்கு மண்டலத்தை பிரித்தாலும் அதை தெலுங்கானாவைப் போல தனி மாநிலமாக்காமல், ஒன்றிய பிரதேசமாக்கவே பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்கினால் அங்கு மீண்டும் திமுக,அதிமுகவே கோலோச்சும், பாஜக வளரவிடாமல் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே துணை நிலை ஆளுநரிடம் கொங்கின் அதிகாரத்தை கொடுத்து பாஜகவை வளர்க்க மேலிடம் விரும்புவதாகவும் தெரிகிறது. 

இதை எல்லாம் தாண்டி தமிழகத்தை தனி தனியே பிரிக்க முக்கிய காரணம், தமிழகத்தில் தற்போது ஒன்றிய அரசுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. மேலும் கடந்த காலங்களில் தனி நாடு கேட்ட வரலாறும் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டை தனி தனியாக பிரித்தால் தனிநாடு கோரிக்கை மீண்டும் எழாமல் செய்துவிடலாம் என்றும் பாஜக தலைமை நினைப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.