ஸ்டாலினின் ஜாதகத்தை கணித்தவர் தன் ஜாதகத்தையும் கணித்திருக்கலாம்..மீம்ஸ் நாயகனான எச்.ராஜாவின் கதை.!

தவளை தன் வாயால் கெடும் : உதாரணம்., எச்.ராஜா..!

ஸ்டாலினின் ஜாதகத்தை கணித்தவர் தன் ஜாதகத்தையும் கணித்திருக்கலாம்..மீம்ஸ் நாயகனான எச்.ராஜாவின் கதை.!
'திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வராக வாய்ப்பு இல்லவே இல்லை , அட அவர் ஜாதகத்திலே அதற்கான வாய்ப்பு இல்லைங்கிறன்'  கடந்த டிசம்பர் மாதம் பாஜக எச்.ராஜா சொன்ன வார்த்தைகள் தான் இது. 
ஆனால், ஸ்டாலினின் ஜாதகத்தை பார்த்த எச்.ராஜா, தன் ஜாதகத்தை பார்க்க மறந்துவிட்டார் போல. முதல்வராக வாய்ப்பே இல்லை என்று சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகி விட, பாவம் இருந்த பதவியும் பிடுங்கப்பட்டு பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறார் எச்.ராஜா.

பாஜகவுக்கு நேற்றுவந்த அண்ணாமலை கூட பாஜக தலைவராகி விட்ட நிலையில், ஆதி காலத்திலிருந்தே பாஜகவின் தமிழக முகமாக பார்க்கப்படும் எச்.ராஜா, இலவு காத்த கிளியாக ஓரத்திலிருந்து அண்ணாமலையின் பதவியேற்பை வாடிய முகத்தோடு பார்த்துக்கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியது. அருகில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்னாரும் அதே முகத்தோடு  எல்.முருகனை பார்த்துக்கொண்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளில் பாஜகவில் தான் எத்தனை மாற்றங்கள்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத எல்.முருகனும், அண்ணாமலையும் பாஜகவில் உச்சங்களை தொட,  தமிழகமெங்கும் ஓடி ஓடி பட்டிதொட்டியெங்கும் கட்சியை வளர்த்த அந்த இரட்டை முகங்கள் அடையாமல் தெரியாமல் போய் விடுமா என அச்சம் பாஜக அனுதாபிகளிடையே எழுந்துள்ளது. 

சரி, யார் இந்த எச்.ராஜா.....? காந்தி கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட போது எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் அதை எதிர்த்து போராடி சிறை சென்றார். அந்த தந்தையின் வாரிசாக பாஜக என்று ஒரு கட்சி இருக்கிறதா என்று தமிழகத்துக்கு தெரியாத 1989ம் ஆண்டிலேயே பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அதே ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  அப்போதிலிருந்து தமிழக பாஜகவின் தூணாக தற்போது வரை இருக்கிறார். 1991இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் பெயர் நாடுமுழுவதும் பேசும்பொருளான நிலையில் தமிழகத்தில் ஹிந்துத்துவ கொள்கையை பரப்புவதில் முன்னிலையில் நின்று செயல்பட்டார்  எச்.ராஜா. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து மாவட்டம் மாவட்டமாக சுற்றி கிளைகளை தொடங்கிய எச்.ராஜாவின் முயற்சிக்கு 2001ம் ஆண்டில் பலன் கிடைத்தது. 

ஒருவழியாக 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காரைக்குடி எம்.எல்.ஏ ஆன எச்.ராஜாவின் செல்வாக்கு தமிழகம் முழுவதும் கிடுகிடுவென அதிகரித்தது. இப்போது எப்படி அண்ணாமலையை அடுத்த முதல்வர் என்று பாஜகவினர் கூறுகிறார்களோ அப்படியே அப்போது பாஜகவினரால் பார்க்கப்பட்டார் எச்.ராஜா. இவரின் வளர்ச்சியால் பாஜகவினரும் தமிழகத்தில் தாமரையை எச்.ராஜா மலரவைப்பார் என்று நம்பத்தொடங்கினார்கள். அந்த நம்பிக்கையில், இனி அடுத்து பாஜக ஆட்சி தான் என்ற கோஷத்தில் 2006 தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து. அதிலும் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட எச்.ராஜா ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். 

அதன்பின்னர் அடுத்த 8 ஆண்டுகள் பாஜகவோ அல்லது எச்.ராஜாவோ சைலன்ட் மோடிலே தான் இருந்தார்கள். டெல்லியிலிலும் ஆட்சி இல்லாத நிலையில் ஊடக கவனமும் அவர்கள் மேல் திரும்பவில்லை. ஆனால் இந்த 8 ஆண்டு வனவாசம்  2014இல் முடிவுக்கு வந்தது. என்ன தான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வழக்கம்போல எச்.ராஜா படுதோல்வியடைந்திருந்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மோடி ஆட்சியமைத்ததால் ஊடக கவனம் பாஜக மேல் திரும்பியது. அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்னார் ஒன்றிய அமைச்சரானதால் அடுத்த பாஜக தலைவர் எச்.ராஜா தான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை தமிழிசையை தலைவராக்கி எச்.ராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக மேலிடம். 

இந்த கடுப்பில் தான் என்னவோ, அதன்பின் அடிக்கடி ஊடகத்துக்கு பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்  இந்த சூழ்நிலையில் தான் அவர் முன்பு பேசிய விடீயோக்களும் வெளியாகி சர்ச்சை நாயகனாக எச்.ராஜாவை உருவாக்கியது . மேலும் பாஜக தலைவராக தமிழிசை இருந்த நேரத்தில் தான் மட்டுமே பாஜக தலைவர் என்பது போல அவர் செயல்பட்டது பாஜகவிலும் அவருக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதோடு,  தமிழக மக்கள் மதிக்கும் தலைவர்களை கொச்சையாகவும், அவதூறாகவும் பேசியது கட்சியை தாண்டி பொதுமக்களின் எதிர்ப்பையும் பெற்றுக்கொடுத்தது. 
அதிலும் தமிழகத்துக்கு அமித்ஷாவுக்கு வந்தபோது அவர் பேச்சை மொழிபெயர்கிறேன் என்று, சொட்டுநீர் பாசனத்தை சிறுநீர் பாசானம் என்று சொன்னது பெரும் காமெடியாக மாறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. அதோடு டெல்லியில் தமிழக விவசாயிகள் செய்த போராட்டத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு you are antiindian  என்று சொன்னது மீம்ஸ் களின் நாயகனாக எச்.ராஜாவை உயர்த்தியது. அதிலிருந்து சமூகவலைத்தளங்களில் கவனிக்கப்படும் நபராக எச்.ராஜா உருவானதோடு, எச்.ராஜா பேசினாலே மீம்ஸ்களுக்கு content கிடைப்பது உறுதி என்ற நிலை உருவாகியது. அரசியல் பதவிக்கு தான் நம் ஜாதகத்தில் இடமில்லை, சாரணர் தேர்தலிலாவது வெற்றிபெறலாம் என்று சாரணர் தேர்தலில் போட்டியிட்டவருக்கு அங்கும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. வெறும் 51 ஓட்டுக்களை பெற்று பரிதாபமாக தோல்வியை தழுவினார் எச்.ராஜா. 

சரி, இனி சினிமா அரசியலில் இறங்கலாம் என்று கோவிலை அவமானப்படுத்திவிட்டார் என்று விஜயை விமர்சிக்க ஜோசப் விஜய் என்று கூற, விஜய்க்கு ஆதரவாக இந்திய அளவில் ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆனது. அதோடு எச்.ராஜா விமர்சித்த மெர்சல் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. மேலும், மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்தேன் என்று கூறி ஒட்டுமொத்த திரையுலகத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் எச்.ராஜா. மத்தவர்கள் என்றால் இப்படி தொடர்ந்து வரும் எதிர்ப்பால் மவுனமாகி விடுவார்கள். ஆனால் இது எச்.ராஜாவாகிற்றே. சும்மா இருப்பாரா என்ன? திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்ததும் அங்கு லெனின் சிலை தகர்க்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டு தமிழகத்திலும், பெரியார் சிலைகள் தகர்க்கப்படும் என்று எச்.ராஜா கூறியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
எச்.ராஜாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதோடு முக்கிய நகரங்களில் எச்.ராஜா உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவையே பாஜகவுக்கு எதிராக பேச வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் என்று..! இந்த சம்பவம் பெரியதாகியதை தொடர்ந்து, அந்த பதிவை நான் போடவில்லை என் அட்மின் தான் போட்டார் என்று எச்.ராஜா சொன்னது இணையத்தில் வைரல் ஆகியது. அன்றிலிருந்து எதற்கு எடுத்தாலும், நான் போஸ்ட் போடவில்லை, அட்மின் தான் போட்டார் என்ற சொல்வடை பிரபலமானது. இப்போது கூட அட்மின் என்றால் பலருக்கு எச்.ராஜா தான் ஞாபகத்துக்கு வரும் அளவு பிரபலமானார் எச்.ராஜா. 

இந்த சர்ச்சை முடிந்து புதிய சர்ச்சையை தொடங்கிவைத்தார் எச்.ராஜா. புதுக்கோட்டையில்  நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் ஊருக்குள் நுழைய முயன்றபோது அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த, கோவத்தில் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாகப் பேசினார் எச்.ராஜா. இது அது இதுவரை இல்லாத அளவு கடும் எதிர்ப்பை கொண்டுவந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல, அங்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு சரணடைந்தார் எச்.ராஜா. ஆனால் இந்த வழக்கில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட அந்த வழக்கில் நான் தலைமறைவாக எல்லாம் இல்லை, என்னை கைது செய்யாதீர்கள் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையும் வைத்தார். 
 
இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால், எப்படி பேசி பேசியே பாஜகவில் வளர்த்தாரோ, அதே பேச்சாலே பாஜகவில் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் ஓரமும் கட்டப்பட்டார் எச்.ராஜா. அவரிடம் இருந்த தேசிய செயலாளர் பொறுப்பும், கேரள மாநில பொறுப்பாளர் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. என்ன தான் இருந்தாலும் மூத்த பாஜக தலைவர் என்ற முறையில் அதன்பின்  கடைசியாக அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அங்கும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. பொதுவாக பாஜகவில் பதவி பறிக்கப்பட்டால் புதிய பதவி வழங்கப்படும். எனவே எப்படியும் புதிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எச்.ராஜா இருந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் செலவுக்காக பாஜக  தலைமை வழங்கிய பணத்தை செலவு செய்யாமல்  பதுக்கியதாக எச்.ராஜா மேல் குற்றசாட்டு எழுந்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மேலிடம் எச்.ராஜாவை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்ட முடிவு செய்துள்ளதாகவும், அதை வெளிப்படுத்தும் விதமாக தான் அண்ணாமலையை பாஜக தலைவராகியதாகவும் கூறப்படுகிறது. இது எச்.ராஜாவுக்கும் புரிந்ததால் தான் அவர் வாடிய முகத்தோடு அண்ணாமலையின் பதவியேற்பு விழாவில் இருந்தாரோ என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.?