கோவா பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார்..!

ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ் : பாஜக அமைச்சர் ராஜினாமா..!

கோவா பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார்..!

கோவாவில் பாஜக அமைச்சர் ஒருவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவா உட்பட பல மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கவுள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸுக்கு கோவாவில் எதிர்பார்க்கும் அளவுக்கு வரவேற்பு இல்லாததால், காங்கிரஸ் குறித்து மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கு நிர்வாகிகள் பணி செய்து வருகின்றனர். அந்த வரிசையில், 

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி ஆளும் பாஜகவின் ஒரு அமைச்சர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுவோம் என அம்மாநில காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது கோவா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது என்றே சொல்லலாம். கோவாவில் மட்டுமில்லாது இந்தியாவிலேயே பாஜக நிர்வாகிகளும், பதவியில் இருப்பவர்களும் பாலியல் புகார்களில் சிக்குவது புதிதானது அல்ல என்பதை மறந்த பாஜக, எதை பற்றியும் கவலைப்படாது, அம்மாநில பாஜக தலைவர் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுங்கள் பார்ப்போம் என காங்கிரஸுக்கு சவால் விடுத்தார். அவசரப்பட்டுட்டியே பரட்ட... என்ற வசனத்திற்கு ஏற்ப, அப்படி காங்கிரஸ் குற்றம்சாட்டும் அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியதாலும், காங்கிரஸ் விடுத்த 15 நாட்கள் கெடு முடிந்ததாலும், பாஜகவின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக்தான் அந்த அமைச்சர் எனவும், அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும் வெளிப்படையாக கூறினார், கோவா மாநில காங்கிர்ஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர். 

பாஜக அமைச்சர் மிலிந்த்தும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் சேட்டின் ஸ்கிரின் ஷாட்ஸ் மற்றும் அப்பெண்ணுடன் அமைச்சர் நடத்திய உரையாடலின் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் கிரிஷ் சோடங்கர். அதுமட்டுமின்றி இந்த ஆதாரங்களை காவல்துறையில் ஒப்படைத்து அமைச்சர் மீது புகாரும் அளிக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பாஜக என்ன செய்வதென்று தவிக்க, ஆதாரங்கள் வெளியான சற்று நேரத்தில் மிலிந்த் நாயக் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். எனினும் உண்மையிலேயே அதற்காகத்தான் அவர் ராஜினாமா செய்தாரா? அல்லது உண்மை வெளிவந்து விட்டது இனி தப்ப முடியாது என்பதற்காக ராஜினாமா 
செய்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. 

கோவாவில் பாஜக வலுவாக இருந்து வரும் போதிலும், இந்த சம்பவம் பாஜகவிற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கோவாவில் காங்கிரஸுக்கு சரிவு இருந்து வரும் வேளையில், மமதா வேறு கோவாவிற்கு குறி வைத்திருப்பதால், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது போல் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. முன்பு குறிப்பிட்டதை போல பாஜகவை சேர்ந்தவர்கள் மீதான பாலியல் புகார் என்பது புதிதல்ல, ஆனால் கோவாவில் இது புதிது என்பதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்த 
சம்பவத்தின் எதிரொலி விழுந்து விடக் கூடாது என்பதற்காக கோவாவில் பாஜக எடுத்து வைக்கும் அடுத்த நகர்வு என்ன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். பசியில் இருந்தவனுக்கு பாயசம் கிடைத்தது போல, காங்கிரஸ் இனி தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டை கையில் எடுத்து, வீதி வீதியாக சென்று மக்களிடம் கூறி, அவர்களை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.