இதற்கு பதிலாக இரண்டாக பிளந்திருக்கலாம்...சீமான் யோசனை!

இதற்கு பதிலாக இரண்டாக பிளந்திருக்கலாம்...சீமான் யோசனை!

அனைத்து சட்டங்களையும் பாராளுமன்ற விவாதம் செய்து கொண்டுவருவதல்ல அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சி சார்பாக தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

தமிழர்களின் ஆளுகைக்குள் தெற்காசியா

தெற்காசிய முழுதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை நம்மால் இப்போது தூக்க கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள்  வாளைதூக்கி குதிரை மேல் நின்று வீசியுள்ளனர். பீட்சா பர்கர் சாப்பிடும் நம்மால்  அதனை தூக்க கூட முடியாது.தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது.

தமிழில் எழுதிவைத்த பாக்களை  படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நலமாக  இருக்கும். தமிழக  அரசுக்கு 6 லட்சம் கோடிரூபாய் கடனிருக்கும் போது 80 கோடியில் பேனா வைக்க திட்டம் போடுகிறார்கள் என கலைஞர் நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் வைக்கப் போவதை விமர்சித்துப் பேசினார்.

நெருக்கடியிலும் தொடரும் மீனவர்களின் கைதுகள்

இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை இந்த நெருக்கடி நிலையிலும் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக ஒரு கேரள மீனவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் கேரளாவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள்

பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்கவைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது.நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள்.

இந்திய - தமிழ்நாடு அரசுகள் மீது விமர்சனம்

 ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் அந்த தொழில் நுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்தமுடியவில்லை. காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் செய்கிறது   ஆனால் பாதிப்பை ஏற்படுத்து அணு மின்சாரம் அனல் மின்சாரம் ஆகியவையை அரசு தான் உற்பத்தி செய்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது. நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார்.யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி.

ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும் முன் எப்போது இருந்ததை விட தமிழகத்தில் கஞ்சா அபின் போன்ற போதை பொருட்கள் அதிகம் பரவுகிறது.கடந்த  ஓராண்டில் 9 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. அனிதா மரணத்திற்கு அழுதவர்கள் இந்த ஆட்சியில் உயிர் நீத்தவர்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லவில்லை

 இந்திய அரசிடம் விமானம், விமான நிலையம்,துறைமுகம்,கல்வி என எதுவும் கிடையாது. அனைத்தும் தனியார் வசம் போய் கொண்டிருக்கிறது சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. நாடா இது சுடுகாடா என்பதே தெரியாமல் கொடுமையாக போய்கொண்டிருக்கிறது. தண்ணீர்,சாலை மின்சாரம்,கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டுவிட்டு அனைத்தையும் தனியாரிடம் பெறவேண்டியுள்ளது.மாங்கிபாத் என மூடிய அறையில் பேசுவதை விட்டுவிட்டு பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து பேசவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சனம்

எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை.சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை தமிழர்கள் கண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டும்.வெள்ளைகார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.

காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்தியாவோடு சேரச் சொல்பவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு செல்லச் சொல்கிறார்கள். அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில்  இல்லை.

தைமூர் கொரியா போல பிரித்திருக்கலாம்

இவர்கள் திராவிட நாடு கேட்டதற்கு பதிலாக கிழக்குத் தைமூர்-மேற்குத் தைமூர், வடகொரியா-தென்கொரியா மாதிரி இந்தியாவை இரண்டாகப் பிளந்திருந்தால் நமக்கு இந்தப் பிரச்சினை கிடையாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அது ஒரு நாள் நடந்தே தீரும்.சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதம் செய்து கொண்டுவருவதில்லை. அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.