எங்கள் அதிமுக...அப்பல்லோ விசிட்... அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அச்சாரமிட்ட சசிகலா!!

எங்கள் அதிமுக...அப்பல்லோ விசிட்... அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அச்சாரமிட்ட சசிகலா!!

அதிமுகவின் மூத்த தலைவரும் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனைக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அதே நேரத்தில் சசிகலாவும் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். இதன் காரணமாக தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட சசிகலாவும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், அப்படி சந்தித்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதைத் தொடர்ந்து, மதுசூதனனின் உடல்நிலையை கேட்டறிந்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த சசிகலா 
"1952ஆம் ஆண்டு மதுசூதனனுக்கு வயது 14. அந்த 14 வயதினிலேயே அவர் தலைவருக்காக வட சென்னையில் எம்.ஜி.ஆர். மன்றம் ஆரம்பித்தவர். தலைவர் மீது மிகவும் பற்று கொண்டவர். தலைவர் காலத்தில் எம்.எல்.. சியாக இருந்தார். தலைவர் மறைவுக்குப் பின் அம்மாவின் ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர்.

எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தின்மூத்த சகோதரர். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு பார்த்துவிட்டுச் செல்கிறேன். அவர் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவரது உறவினர்களிடம் விசாரித்துவிட்டு, அவரையும் பார்த்துவிட்டு வருகிறேன்.நன்றி" என்று கூறியிருந்தார். 

இந்த நிகழ்வுக்காக ஜெயலிதாவின் காரில் கட்சிக்கொடியுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார் சசிகலா. ஏற்கனவே கட்சிக்கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக தலைவர்களால் வழக்கு தொடுத்திருந்த நிலையில், கட்சிக்கொடியுடன் சசிகலா வந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் "சசிகலா மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனை பார்ப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் அவர் அதிமுக கொடி கட்டிய காரில் வந்து சென்றது கண்டிக்கத் தக்கது. அதிமுகவுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை" என்று காட்டமாக கூறியிருந்தார். 

ஏற்கனவே தொலைபேசி ஆடியோக்களில் அதிமுகவை கைப்பற்றுவேன்,தொண்டர்களை சந்திப்பேன், அம்மா சமாதிக்கு செல்வேன் என்று பேசிவந்த சசிகலா, மதுசூதனனை சந்தித்ததன் மூலம் தன் அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அச்சாரமிட்டிருக்கிறது இந்த அப்பல்லோ விசிட்.