ஒடிசா ரயில் விபத்து: கார்கே, பிரதமர் மோடிக்கு கண்டனம்!

ஒடிசா ரயில் விபத்து: கார்கே, பிரதமர் மோடிக்கு கண்டனம்!

ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் செலுத்தாமல், வந்தே பாரத்துக்கு கொடி அசைத்துக் கொண்டிருக்கிறார் எனக் குற்றம் சாற்றியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே! 

ஒடிசாவில் கோரமான ரயில் விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், அந்நிகழ்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கார்கே கூறியிருப்பதாவது: 

ரயில்வே துறையில் மூன்று லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் பற்றாக்குறையால், ரயில் ஓட்டுனர்கள் கூடுதல் நேரம் பணியில் இருப்பதே நடக்கும் அனைத்து விபத்துகளுக்கும் காரணம் ஆகும் என ரயில்வே வாரியமே அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும் அக்காலியிடங்கள் நிரப்படாதது ஏன்? என கேள்வி ஈழுப்பியுள்ளார்.

சிக்னல் கட்டமைப்பு முறையில் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை செயல்பாடு மேலாளர் கடந்த பிப்ரவரி 8ல் கோரியிருந்தார். மைசூரில் இரு ரயில்கள் மோதிக்கொள்ளவிருந்த நிகழ்வு தவிர்க்கப் பட்டத்தை அவர் குறிப்பிட்டுருந்தார். ரயில்வே அமைச்சகம் ஏன் அவர் கோரிக்கையை ஏற்று செயல்படவில்லை? எனவும் கேள்வி ஈழுப்பியுள்ளார்.

நம் நாட்டில் நிகழும் விபத்துகளில், 8 முதல் 10 சதவீத விபத்துகளை மட்டுமே ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கன்றது. அந்த அமைப்பு ஏன் வலுப்படுத்தப்படவில்லை? எனவும் சாடியுள்ளார்.

"கவாச்" எனப்படும் ரயில்கள் மோதல் தவிர்ப்பு கட்டமைப்பு, இதுவரை 4 சதவீத வழித்தடங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது ஏன்? எனவும் கேள்வி ஈழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து துவக்கி வைப்பதில் காட்டும் ஆர்வத்தினை, ரயில்களின் பாதுகாப்பில் செலுத்துவதில்லை. இது போன்ற விபத்து நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டுமெனில், உயர்நிலை முதல் கடைநிலையில் இருக்கும் ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டும். அப்பொழுது தன விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும், எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஒடிசாவில் நிகழ்ந்த இந்த கோரா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக கோரியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார். அப்போது ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று பதவிகளை துறந்த கட்சி தான் காங்கிரஸ் என்றும், விபத்திற்கு எவ்வித சாக்கு போக்கும் காங்கிரஸ் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, அஸ்வினி வைஷ்ணவ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். கோரமண்டல் ரயில் பிரதான வழித்தடத்தில் நுழைய முதலில் சிக்னல் அளிக்கப்பட்டு, பின்னர் அது மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏற்க்கனவே சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தண்டவாளத்தில் (லூப் லைனில்), கோரமண்டல் ரயில் நுழைந்ததால் பெரும் விபத்து நேரிட்டது. இந்த சிக்னல் மாற்றத்தின் பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என்று கூறியுள்ளார்.