திமுக தலைமையை எவ்வாறு கைப்பற்றினார் கருணாநிதி?

திமுகவில் அண்ணாவுக்குப் பிறகு நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராசன் ஆகியோர் முக்கியத் தலைவர்களாகப் பார்க்கப்பட்டனர்.

திமுக தலைமையை எவ்வாறு கைப்பற்றினார் கருணாநிதி?

திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இக்கட்சி திராவிடர் கழகத்துடனான முரண்பாட்டில் அதிலிருந்து பிரிந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது.

திமுகவில் பொதுச்செயலாளர் பதவி

பெரியார்-மணியம்மை திருமணம்,திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா அக்கட்சிக்கு தலைவர் பதவியை உருவாக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் “நமக்கெல்லாம் அப்போது நல்வழிகாட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்” என்று கூறி திமுகவுடைய பொதுச் செயலாளராகத் தான் பதவியேற்றார்.

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்

பொதுச் செயலாளராக அண்ணா, பிரச்சாரக்குழு செயலாளராக இரா.நெடுஞ்செழியன், அமைப்புக்குழுச் செயலாளராக என்.வி.நடராசன், சட்ட திட்டக்குழு செயலாளராக கே.ஏ.மதியழகன், நிதிக்குழு செயலாளராக காஞ்சிமணி மொழியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இல்லை. அவர் பிரச்சாரக் குழு உறுப்பினராகத் தான் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியின் மூன்றாம் கட்டத் தலைவராக கருணாநிதி இருந்தார் என்பது தெரிய வருகிறது.

திமுகவின் முதல் தேர்தல்

திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆண்டு தொடங்கப்பட்டாலும் அது 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தான் முதன் முதலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதி குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த வந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. கருணாநிதி வெற்றி பெற்று அமைச்சரானார்.

திமுகவின் முக்கியத் தலைவர்கள்

திமுகவில் அண்ணாவுக்குப் பிறகு நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராசன் ஆகியோர் முக்கியத் தலைவர்களாகப் பார்க்கப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு அடுத்த பொதுச்செயலாளர் யார் என எதிர்பார்ப்பு நிலவியது. பெரும்பாலானோர் நெடுஞ்செழியன் தான் தலைமைக்கு வருவார் என நினைத்தனர்.திமுகவுக்குள் குழப்பம் நிலவியது பிறகு ஒரு வழியாக கட்சியின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் தலைவராக கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தற்போது அதிமுகவில் நிலவும் சூழலைப் பார்க்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் கருணாநிதி பாதையில் பயணிக்கிறாரோ என தோன்றுகிறது.