ட்விட்டர் ஏலத்தில் இருந்து விலகும் எலோன் மஸ்க்....

டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க், நுண் வலைப்பதிவு தளமான ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஏலத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் ஏலத்தில் இருந்து விலகும் எலோன் மஸ்க்....

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில், ட்விட்டர் ஒப்பந்தத்தில் விதி மீறல் இருப்பதாலும், பேச்சுவார்த்தைகளின் போது தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை தந்ததாலும், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை தொடர திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்க முடிவு செய்த பிறகு, ஒப்பந்தத்தில் இருந்து விடுவிப்பதற்கான மஸ்க்கின் நடவடிக்கை நீண்டகால  ஒப்பந்ததில்  திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க காரணம்:

ட்விட்டர் அதன் தளத்தில் போலியான அல்லது தவறான கணக்குகள் குறித்த தேவையான தகவல்களை வழங்கவில்லை என்று மே மாதமே மஸ்க் கூறியிருந்ததார். அந்த நேரத்தில், ட்விட்டர் உண்மையான தரவுகளை தரும் வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக மஸ்க் ட்விட்டர் தளத்தில் போலி அல்லது தவறான கணக்குகளின் பரவலை அவராகவே மதிப்பீடு செய்து தேவையான தரவு மற்றும் தகவல்களைத் தேடினார் எனவும், ஆனால் ட்விட்டர் இந்தத் தகவல்களை தரவில்லை சில சமயங்களில் ட்விட்டர் மஸ்க்கின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது என மஸ்க்கின் சட்டக்குழு அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் அதன் மூத்த நிர்வாகிகளையும் அதன் திறமையான குழுவில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களை நீக்கியதாகவும், தற்போதைய வணிக அமைப்பின் சமூகத் தர நிலையை கணிசமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ட்விட்டர் அதன் கடமையை மீறியதாகவும் காரணம் காட்டி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக மஸ்க் கூறினார்.

ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு மஸ்க்  கூறிய  முக்கிய காரணங்கள் இவை என்றாலும், பல வெளிப்புற காரணிகளும் அவரது முடிவில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகளாவிய தொழில்நுட்ப பங்குககளில் ட்விட்டரின் பங்கும் டெஸ்லாவின் பங்கும் 24 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதும் இதற்கான காரணங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

அடுத்தது என்ன?

மஸ்க் மற்றும் ட்விட்டர் இடையே  ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தை எதிர்பார்க்கலாம் எனவும்  ட்விட்டர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமல்படுத்த சட்ட நடவடிக்கைகளைத் தொடரும் என்பதும் தெளிவாக தெரிகிறது.

ட்விட்டர், மஸ்க் உடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை மற்றும் விதிமுறைகளின் மீதான பரிவர்த்தனையை முடிக்க உறுதிபூண்டுள்ளது எனவும் இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளது எனவும் சட்ட முறைப்படி  தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புவதாகவும்  ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லர் கூறியுள்ளார். 


மஸ்க்-ட்விட்டர் ஒப்பந்தத்தில் பல திருப்பங்கள்:

ஜனவரி 2022 இல் மஸ்க் ட்விட்டரின் பங்குகளை வாங்கத் தொடங்கினார்.  மேலும் நிறுவனத்தில் அவரது பங்குகள் மார்ச் மாதத்தில் 5 சதவீதத்திற்கும் ஏப்ரலில் 9.2 சதவீதத்திற்கும் உயர்ந்து, அவரை நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக மாற்றியது.

ஏப்ரல் 4 ஆம் தேதி ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், மஸ்க் ட்விட்டரின் குழுவில் சேரப் போவதாக அறிவித்திருந்த நிலையில்.  ஏப்ரல் 14 அன்று, மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்ததை வழங்கியதாக தெரிகிறது.  மஸ்க் தனது நிதித் திட்டத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்த பிறகு, அவர் 46.5 பில்லியன் டாலருக்கு  ஏப்ரல் 25  ட்விட்டரை வாங்குவதற்கும் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்குமான அவரது ஒப்பந்தத்தை ட்விட்டர் ஏற்றுக்கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரங்களில், மஸ்க் சுமார் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்று, ட்விட்டர் ஒப்பந்தத்திற்கு நிதியளிப்பதற்காக 7.1 பில்லியன் டாலர் திரட்டியதாக தெரிய வருகிறது.

மே 14 அன்று, ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மஸ்க் கூறியிருந்தார். ட்விட்டரின்  பயனாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே போலி கணக்குகள் என்று ட்விட்டர் தலைமை நிர்வாகி அகர்வால் கூறியிருந்த நிலையில் போலி கணக்குகள் குறித்த சரியான  ஆதாரம் இல்லை எனக்கூறி ஒப்பந்தத்தை மஸ்க் நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.