குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளர் யார்? நாளை பாஜக ஆலோசனை!

குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளர் யார்? நாளை பாஜக ஆலோசனை!

இந்தியாவின் 16ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பாக ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

ஆனால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்.

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜக ஆட்சி மன்ற குழு நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு தான் வெற்றி வாய்ப்பு என ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில், தாங்கள் நிறுத்தும் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரும் வெற்றிபெற வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது.