வீட்டுப் பிரசவத்திற்கு எதிர்ப்பு...அடாவடியில் ஈடுபட்ட காவல்துறை - சுகாதாரத் துறை மீது புகார்!

இயற்கை முறையிலான பிரசவத்தின் எல்லா நிலைகளும் முடிந்து விட்டன. எனக்கு ஆங்கில மருத்துவ முறையில் நாட்டமில்லை. நான் ஏன் ஆரம்ப சுகாதார நிலையம் உடனே வரவேண்டும். நீங்கள் கேட்கும் எல்லா தகவல்களையும் தருகிறேன் எனக் கூறியும் கையில் உறையை மாட்டிக் கொண்டு குழந்தையை தூக்குவதற்கு உள்ளே நுழைந்துள்ளார்கள். 

வீட்டுப் பிரசவத்திற்கு எதிர்ப்பு...அடாவடியில் ஈடுபட்ட காவல்துறை - சுகாதாரத் துறை மீது புகார்!

கடந்த 04 அக்டோபர் 2022 அன்று மதியம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எருக்கூரில் ஜான் - பெல்சியா தம்பதியனருக்கு இயற்கை முறையில் வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. திருமதி. பெல்சியா கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை ஆங்கில மருத்துவமுறையை பின்பற்றவில்லை.  

சுகாதாரத் துறையினர் மிரட்டல்

குழந்தை பிறந்த தகவலறிந்து செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஜான் - பெல்சியா தம்பதியினரின் வீட்டுக்கு வந்துள்ளது. தாயையும் சேயையும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்கள். உடனே அவசர ஊர்தியில் ஏறுங்கள் என வற்புறுத்தியுள்ளார்கள். 

மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரிகள்

குழந்தை பிறந்து விட்டது, நஞ்சுக் கொடி வந்துவிட்டது இயற்கை முறையிலான பிரசவத்தின் எல்லா நிலைகளும் முடிந்து விட்டன. எனக்கு ஆங்கில மருத்துவ முறையில் நாட்டமில்லை. நான் ஏன் ஆரம்ப சுகாதார நிலையம் உடனே வரவேண்டும். நீங்கள் கேட்கும் எல்லா தகவல்களையும் தருகிறேன் எனக் கூறியும் கையில் உறையை மாட்டிக் கொண்டு குழந்தையை தூக்குவதற்கு உள்ளே நுழைந்துள்ளார்கள். 

தம்பதியினர் மீது சட்டவிரோதமாக வழக்கு 

குழந்தை பிறந்து நான்கு மணி நேரமே ஆன தாய்க்கு மனதளவில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரத்தில் மிகப்பெரிய மன நெருக்கடியை கொடுத்துள்ளார்கள். தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்கள். தேடப்படும் ஒரு குற்றவாளியை பிடிப்பது போல் நள்ளிரவில் இரண்டு அவசர ஊர்திகள், சுகாதாரத்துறை, காவல்துறை என ஒரு கூட்டமே வந்து அவர்களை மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வளவையும் செய்துவிட்டு அந்த தம்பதியினர் மேல் வழக்கும் தொடுத்துள்ளார்கள்.

மற்றொரு நிகழ்வு

இது போன்ற நிகழ்வு அடுத்த நாள் சென்னையிலும் அரங்கேறியது. கோடம்பாக்கம் ரபெல்லா - ஐசுவர்யா தம்பதியினருக்கு 06.10.2022 அன்று காலை வீட்டிலேயே இயற்கை வழியில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றவில்லை.

சுகாதாரத்துறை, இரண்டு அவசர ஊர்திகள் என வந்து குழந்தை பெற்ற தாயிடமும், அவர் இணையாரிடமும் உடனே ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு வரச்சொல்லி மிரட்டியுள்ளார்கள். வழக்கறிஞர் தலையிட்டு உரிமைகளை பேசிய பின் மிரட்டுவதை நிறுத்தி விட்டனர்.ஆனால் தொடர்ந்து அங்கேயே இருந்திருக்கிறார்கள்.

மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலும் மனித உரிமை மீறல் செய்த சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையின் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 - ஜோஸ்