நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? அதை முதல்ல சொல்லுங்க- எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி?

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? அதை முதல்ல சொல்லுங்க- எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி?

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது, கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்களுக்கு அதிமுகவினர்  தேவையான உதவிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பெட்ரோல் ரூ 5 டீசல் ரூ 4 விலை குறைப்பு செய்வதாக திமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள காலத்தில் வேலையிழந்து, கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர் எனவே திமுக அரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முறையாக போடப்படுவதில்லை. அதிகளவில் மையத்திற்கு வரும்  மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எவ்வளவு தடுப்பூசி உள்ளதோ என்பது குறித்து முன்கூட்டியே அறிவித்து அந்த அளவு மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும்  என்றார்.

திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அனைத்தும் தெரிந்தும் திமுக தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது . இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவர்களும் பெற்றோர்களும்  உள்ளனர். எனவே நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து பேசியவர் அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகலா 10 ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை அதிமுக உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.