கிணற்றில் போடப்பட்ட கல்லாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு... பாதிரியார் மீது போக்சோ சட்டம் பாயாதது ஏன்...? பாலியல் புகாரில் கைதான நிர்மலா தேவி வெளியில் சுற்றுகிறாரே.. எப்படி?

பாலியல் வழக்கில் கைதானவர்கள் தொடர்ந்து தப்புவது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதுகுறித்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா...

கிணற்றில் போடப்பட்ட கல்லாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு... பாதிரியார் மீது போக்சோ சட்டம் பாயாதது ஏன்...? பாலியல் புகாரில் கைதான நிர்மலா தேவி வெளியில் சுற்றுகிறாரே.. எப்படி?
பொள்ளாச்சியில் பெண்களை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் அதிமுக அமைச்சருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்பட்டது. சிலர் கைதும் செய்யப்பட்டார்கள்.

அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை சவலைப்பிள்ளையாகக் கருதி ஓரங்கட்டினார்கள். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை சும்மா விடமாட்டோம், கண்டிப்பாக  தண்டிப்போம் என்று கனிமொழி எம்.பி.யும், மு.க.ஸ்டாலினும் அப்போது உறுதியாக சொன்னார்கள். மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்று ஒருமாதம் தாண்டிவிட்டது. இன்னமும் அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. 
 
பேராசிரியை நிர்மலாதேவி பல மாணவிகளை வசப்படுத்தி, பாலியல் பலாத்காரத்திற்கு உடன்பட வைத்தார் என்று நிர்மலாதேவி மீது வழக்கு தொடரப்பட்டது. அவரும் 6 மாதம் சிறையிலிருந்தார். திடீரென்று தனக்கு பைத்தியம் என்று சொல்லி, நீதிமன்ற வளாகத்திலேயே மனநலம் பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டார்.

இப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி வெளியே சகஜமாக நடமாடி வருகிறார். அந்த வழக்கு என்னவாயிற்று என்று இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.
 
புரசைவாக்கத்தில் ஒரு பாதிரியார் மீது பின்னணி பாடகி ஒருவர் புகார் தெரிவித்தார். தன்னுடைய தங்கையை அவர் பாதுகாப்பில் விட்டு விட்டு போனதாகவும், தங்கையை பாதிரியார் தன்னுடைய காம இச்சைக்கு பயன்படுத்தியதாகவும் பின்னணி பாடகி புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் பாதிரியாரின் பெயரோ, பின்னணி பாடகியின் பெயரோ, பாடகியின் தங்கையின் பெயரோ வெளிவராமல் மறைக்கப்பட்டது. இதற்கு காரணம் ஏன் என்பதும் புரியவில்லை. ஆனால் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கிறது.  மற்ற வழக்குகளில் போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் பாதிரியாரின் மீது போக்சோ சட்டம் ஏன் பாயவில்லை?