அடுத்த தீர்ப்பு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

அடுத்த தீர்ப்பு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இரு அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். 

பொதுக்குழுவை ரத்துசெய்யக்கோரி வழக்கு:

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

இந்த வழக்கின் தீர்ப்பை, கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கினார். அதில், ஜுலை  11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிமுகவி இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது செல்லாது என்றானது.

ஈபிஎஸ் மேல்முறையீடு:

இதனையடுத்து, பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் இருவரின் அமர்வில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.

செப்டம்பர் 2 ஆம் தேதியின் தீர்ப்பு:

ஈபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கில் இருஅமர்வு நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை ரத்து செய்வதாகவும் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

இதையும் படிக்க: கோட் சூட்டில் லண்டன் பறந்த அமைச்சர்...வேற லெவலில் ட்ரெண்டாகும் போட்டோஸ்...!ஏன் தெரியுமா?

ஓபிஎஸ் மேல்முறையீடு:

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

அடுத்த தீர்ப்பு யாருக்கு:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல், தீர்ப்பும் மாறி மாறி சாதகமாகவும் பாதகமாகவும் அமைகிறது. அந்த வகையில் தற்போது ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன தீர்ப்பளிக்க போகின்றனர், இந்த முறை யாருக்கு சாதகமாக தீர்ப்பு வர போகிறது, முதலில் தீர்ப்பானது சட்டப்படியா? அல்லது விருப்பத்தின்படியா? அல்லது இந்த வழக்கை 2024 ஆம் ஆண்டு வரும் தேர்தல் வரைக்கும் எடுத்து செல்வார்களா? என்ற கேள்விகள் எல்லாம் அரசியல் பார்வையாளர்களிடையே பேசப்பட்டு வருகிறது.