ஒபாமாவுக்கே ஆலோசனை சொன்னவர்,.. ஸ்டாலினின் குழுவில் இடம்பிடித்த எஸ்தர் டஃப்லோ பற்றி தெரியுமா?  

ஒபாமாவுக்கே ஆலோசனை சொன்னவர்,.. ஸ்டாலினின் குழுவில் இடம்பிடித்த எஸ்தர் டஃப்லோ பற்றி தெரியுமா?  

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ இடம்பெற்றது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் ஒரு நாட்டின் ஆலோசகராக இருப்பதற்கே யோசிப்பார்கள். ஆனால் ஒரு மாநிலத்தில், அதுவும் ஐவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றது பல்வேறு தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிரெஞ்சு அமெரிக்கனான எஸ்தர் டஃப்லோ 2019ம் ஆண்டு அபிஜித் பானெர்ஜீயுடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார். இவர் தற்போது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் பேராசிரியராகவும் இருக்கிறார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். 

இவரது ஆய்வுகள் வளரும் நாடுகளின் பொருளாதரச் சூழ்நிலையியல், இல்லற நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், மதிப்பீட்டு கொள்கை ஆகியவை பற்றியதாகவும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவரது ஆலோசனைகள் இன்றியமையாததாகும். பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கான பொருளாதாரம் பற்றி அதிகம் பேசிவரும் இவர், இத்தகைய மக்களுக்கு ஒரு அரசு எப்படி உதவமுடியும், உதவவேண்டும் என்று பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆலோசனைகள் நிச்சயம் தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.