எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றிய ஒருவர் தான் தலைமைக்கு வேண்டும் - கே.சி.பழனிசாமி ஆவேசம்!

எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றிய ஒருவர் தான் தலைமைக்கு வேண்டும் - கே.சி.பழனிசாமி ஆவேசம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், வருகிற ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்ந்தெடுக்க அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். இது குறித்து மாலை முரசு இணையதளத்தில் இருந்து தொலைபேசி நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த நேர்க்காணல் இதோ;

தமிழ்செல்வி: ஆரம்பத்துல இருந்தே தொண்டரள் தான் அதிமுக தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்றீங்க...அது எப்படி சாத்தியம்? அதிமுகவில் 1 கோடி தொண்டர்கள் இருக்காங்க அவங்கள எப்படி ஒன்றிணைப்பீங்க?

கே.சி. பழனிசாமி: இதுல இரண்டு விஷயத்தை பார்க்கணும். ஒன்னு அமெரிக்காவில் பார்த்த Primary secondary - னு இருக்கும். அதுல  Primary - ல பார்த்தீங்கன்னா அந்தந்த கட்சிக்குள்ள யார் ஜனாதிபதி வேட்பாளரோ அல்லது மாகாண கவர்னர்கள் அந்த நடைமுறைகள் தான் அண்ணாதிமுகவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து உருவாக்கியிருக்கிறார். இரண்டாவது  உலகத்திலேயே அதிக ஜனத்தொகை கொண்ட 100கோடிக்கும் மேற்பட்ட ஜனத்தொகை கொண்டுள்ள இந்தியா நாட்டில் நம்ம ஜனநாயகத்தை நிலைநாட்டுறோம். அப்போ  இந்திய அளவில் இருக்கக்கூடிய ஒரு கட்சிகளில் அதில் இருக்கும் அனைத்து தொண்டர்களாலும் அக்கட்சிகளில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லது ஏற்றுக்கொள்ளப்படுபவர் தான் இக்கட்சியினுடைய தலைவராக இருக்க முடியும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியுள்ளார். அவர் மட்டும் அல்ல அவருக்கு பிறகு கட்சியை தலைமையேற்று நடத்திய அம்மா ஜெயலலிதா அவர்களும் சொல்லியிருக்காங்க...ஏன் அதை சொன்னாங்க...ஜெயலலிதா அம்மா 2007 - ல் ஒரு தீர்மானமே கொண்டு வந்தாங்க பொதுக்குழுவுக்கு எல்லா அதிகாரமும் இருக்கு; ஆனா பொதுச்செயலாளர் குறித்து முடிவு எடுப்பதற்கு எந்தவித அதிகாரமும் பொதுக்குழுவுக்கு இல்லை. இதுதான் திருத்தம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அண்ணாதிமுக கட்சியினுடைய விதிகள். இது இந்தியாவில் வேறு எந்த கட்சிகளிலும் இல்லை. அதற்கு என்ன காரணம் என்று பார்த்தீங்கன்னா...திராவிட முன்னேற்ற கலக கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அடிமட்டத்தில் இருந்த அக்கட்சியை பட்டித்தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர் புரட்சி தலைவர். ஆனால் பொதுக்குழு என்று சில சுயநலவாதிகளால் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் அவரை அந்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றினார்கள். அதனால் அந்தமாறியான நிலைமை எதிர்காலத்தில் அண்ணாதிமுகவிற்கு வரக்கூடாது என்பதற்காக தான், அண்ணாதிமுகவில் உள்ள அடிப்படை தொண்டனால் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், கூறினார். அதனால் ஒரு தேர்தலை முறையாக அறிவித்து விழிப்புணர்வுள்ள எல்லோரையும் கட்சியில் சேர்த்து அவர்களுக்கு உறுப்பினர்கள் அட்டையை முறைப்படி கொடுத்து , முறையான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு, அதில் பொதுச்செயலாளர் முதல் கிளைச்செயலாளர் வரை தேர்தல் நடத்தினால் தான் ஒரு உண்மையான ஜனநாயகம் அண்ணாதிமுகவில் தலைத்தோங்கும் என்றார்.

தமிழ்செல்வி: அதிமுகவில் பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்யவேண்டும் என்பது கட்சியின் விதியாய் இருக்கு...ஆனா 2017 ஆம் ஆண்டு அதில் திருத்தம் பண்ணி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி கொண்டுவரப்பட்டு ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருந்துட்டு வராங்க.இவங்க தொண்டர்களால் தேர்வு செய்ய படாததால் இவங்க நியமனங்கள் செல்லாதுன்னு அறிவிக்க சொல்றீங்க...

கே.சி.பழனிசாமி: சசிகலா இடைக்கால பொதுச்செயலாளர் என்று பொதுக்குழுவால் 2016 டிசம்பர் 29ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அதனையடுத்து எல்லா நிர்வாகிகளும் சசிகலாவுக்கு ஆதரவு தரும் வேளையில், நான் ஒருவன் மட்டுமே அவர்களை எதிர்த்து  ஜனவரி 6 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தேன். இறுதியில் சசிகலாவின் அந்த நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வந்தது. அதற்கு பிறகு இந்த அணிகள் பிளவுப்பட்டது , மீண்டும் இணைந்தபோது இரட்டைத்தலைமையை உருவாக்குகிறார்கள். அந்த சமயத்தில் ஒ..பி.எஸ், இ.பி.எஸ் இரண்டு பேரிடத்திலும் நான் மிக நெருக்கமாக, நட்போடு இருக்கிறோம். ஆனால் இப்படி விதியை திருத்துகிறோம் என்று தலைமை செயலகத்தில் வைத்து இ.பி.எஸ் ஓ.பி.எஸ் அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் வைத்து என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் அதை ஏற்கமாட்டேன்; நான் எம்.ஜி.ஆர் வழி வந்தவன்; இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் என்று சொன்னேன். ஆனால் அடுத்தநாள் நடந்த பொதுக்குழுவில் என்னை தவிர்த்துவிட்டு இதை செய்தார்கள். உடனே அத எதிர்த்ஹ்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில் நீதியரசர் சிஸ்தானி, நீங்க பொதுச்செயலளார் என்றோ, அல்லது தலைவர் என்றோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தொண்டர்கள் தான் தேர்தெடுக்கனும் என்ற அடிப்படை விதியை தொண்டர்களுக்கு கொடுத்திருக்கிற அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.    அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் கடந்த 2021 டிசம்பர் 1ஆம் தேதி தொண்டர்களை வைத்து ஒரு தேர்தலை நடத்தி செயற்குழு தொண்டர்களால் தேர்தெடுக்கப்பட்டு விட்டதாக அவர்கள் அறிவித்தனர். ஆனா இப்போ இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதால் ஒற்றை தலைமை என்று சசிகலா அவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி பயணிக்க ஆரம்பிச்சிருக்கார். இதை அண்ணாதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்செல்வி: இது ஒரு கட்சி சார்ந்த தேர்தல்..இதுல தேர்தல் ஆணையம் எந்த விதத்துல உதவும்?

கே.சி.பழனிசாமி: அண்ணாதிமுகவுக்கு இது தான் மூலப்பத்திரம், இதுதான் விதி என்று அம்மா அவர்கள் காலத்திலேயே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போ அதன்படி நீங்க தேர்தலை நடத்திட்டு வாங்க..அதைதான் நாங்கள் அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் சொல்லனும். ஆனா எடப்பாடி என்ன செய்தாலும், பன்னீர் செல்வம் என்ன செய்தாலும் தேர்தல் ஆணையம் சரி சரி என்று சொல்கிறது. அதே போன்று தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு சரி. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சிக்கு அண்ணாதிமுகவை அடிமைப்படுத்துகிற இவர்களின் செயல் பாரதிய ஜனதாக்கட்சியை வளர்ப்பதற்கு அது சரி. இரண்டாவது அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு அவங்களுக்கு இது சுயநலம். இப்படி எம்.ஜி.ஆர் அம்மா போன்று மாபெரும் தலைவர்கள் உருவாக்கியதை பாஜகவின் கைக்கூலிகளாக ஓ.பி.எஸ் - ம் இ.பி.எஸ் ம் சிதைக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்செல்வி: அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்கள்...அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறவங்க அதிமுக நிலை குறித்து என்ன நினைக்கிறாங்க?

கே.சி.பழனிசாமி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை விட..இன்றளவும் அதிமுகவில் உறுப்பினர்களாக இருக்கும் பலர் என்னிடம் தொடர்பில் தான் இருக்கிறார்கள். எல்லோரும் நினைப்பது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு தலைமை, பொதுச்செயலாளர். இதுதான் எல்லோருடைய விருப்பம். ஆனா அது ஒ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் வேண்டாம். என் போன்ற எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றிய ஒருவர் தான் தலைமையாக வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

தமிழ்செல்வி: இறுதியாக இதே பணியில் அதிமுக பொய்க்கெண்டிருந்தால் என்ன நடக்கும் ? எங்கே சென்று முடியும் ? இல்லை என்ன தான் நடக்க வேண்டும் அதிமுகவில் என்று தொண்டர்கள், நிர்வாகிகள் நினைக்கிறார்கள்..?

கே.சி.பழனிசாமி: ஈபிஸும், ஓபிஸும் அதிமுக கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட வேண்டும். தொண்டர்களை கொண்டு ஒரு பொது செயலாளருக்கு நடுநிலையோடு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு தேர்தல் அதிகாரிகளாக அவர்கள் நியமிக்கப்பட்டு கிளையிலிருந்து தலைமை வரை நடத்தப்பட வேண்டும். அதில் எம்ஜிஆர் வழியில் கட்சியை வழி நடத்துபவர்கள் தேர்தலுக்கு தகுந்தவர்கள் என்று கூறி முடித்துவிட்டார்.