உதயநிதியின் திறமைக்கு...இது காலதாமதமே...அமைச்சர் பகீர்!

உதயநிதியின் திறமைக்கு...இது காலதாமதமே...அமைச்சர் பகீர்!

உதயநிதிக்கு அமைச்சர் பதவி தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 14:

சேப்பாக்கம் - திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் முகஸ்டாலின் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதற்கு ஒப்புதல் வழங்கி, அவரது சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிட்டார். அதன்படி, வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி அதாவது, நாளை காலை 9.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

வாரிசு அரசியல்:

முன்னதாகவே, திமுக வாரிசு அரசியல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் எழுந்து வருகிறது. அதைத்தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு அமைச்சர் என்ற மகுடத்தை சூட்டவுள்ளார். இந்நிகழ்வு ஏற்கனவே திமுக வாரிசு அரசியல் நடத்துவதாக கூறி வரும் எதிர்க்கட்சிகளுக்கு தீனி போட்டது போலவே அமைந்துள்ளது.

வாரிசு அரசியல் கிடையாது:

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது வாரிசு அரசியல் ஆகாதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திமுகவில் 10% நபர்களின் வாரிசுகளுக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதம் 90% பேர் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், ஒரு கட்சியில் 10% வாரிசு பதவி என்பது வழக்கமாக அனைத்து கட்சியிலும் இருப்பது தான் என தெரிவித்த அவர், உதயநிதி அமைச்சராவது வாரிசு அரசியல் கிடையாது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் பதவி வழங்குவதில் காலதாமதம்:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பணிக்கு ஆரம்பத்திலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் சிறிது காலம் உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி அனுபவம் பெறட்டும் என நினைத்திருப்பார் போல, அதனால் தான் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உதயநிதியின் திறமைக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்குவது காலதாமதம் என்றே தான் கருதுவதாகவும், அவர் அமைச்சரான பின்பு எனக்கு தெரியாததை அவரிடத்திலும் அவருக்கு ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்பட்டால் நானும் மாறி மாறி உதவிக் செய்து கொள்வோம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.