கல்வி கண் திறந்த காரமராஜரின் பிறந்தநாள் இன்று!

கல்வி கண் திறந்த காரமராஜரின் பிறந்தநாள் இன்று!

கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

கர்மவீரர் காமராஜர் போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எத்தனையோ பேர் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த ஆசையை கனவிலும் நிறைவேற்ற முடியாது என்பதுதான் காமராஜருக்கு தற்போது வரை கிடைத்திருக்கும் வெற்றி, புகழ், எல்லாவற்றிற்கும் காரணம். 

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை விரலை நீட்டி அப்படி என்ன செய்து விட்டார் என கேள்வி எழுப்பலாம். ஆனால் விரல் நீட்டி கேட்பதையே விடுத்து கரம் கூப்பி வணங்குவதோடு தலை தாழ்ந்து வணங்கவும் வைக்கும் தகுதியான ஒரே மனிதரெனில் அவர் காமராஜரே. 

காமராஜர் சக மனிதனுக்கு வாழ்க்கையை சொல்லித்தந்த அதே வேளையில் முத்திரை பதித்த முத்தான திட்டங்களை அள்ளித் தந்தார். அவரது திட்டங்களே இன்றைக்கு தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வித்திட்டுள்ளன. 

குடிநீர் இன்றி வாடும் வறட்சி நிறைந்த கிராமங்களில் குடிநீர் வழங்குவதற்காக கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறட்சி காணாமல் பயனடைந்தன.  

காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிலமற்ற விவசாயிகள் பயன்பெற தக்க வகையில் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 1959-ம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் அமைக்கப்பட்டது, 1960-ம் ஆண்டு சென்னை தங்க சாலையில் திரைப்பட நகரம் தொடங்கப்பட்டது. கல்விக்கான எத்தனையோ மகத்தான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டு மக்களை அறிவுக்கடலில் திளைக்க வைத்தது. 

காமராஜர் இல்லையென்றால் கல்வி இல்லை, காமராஜர் இல்லையென்றால் அணைகள் இல்லை, காமராஜர் இல்லையென்றால் தொழிற்சாலைகள் இல்லை, காமராஜர் இல்லை என்றால் ஏழையின் முகத்தில் சிரிப்பே இல்லை என அடித்துக்கூறும் அளவுக்கு அமைந்தது அவரது அரசாட்சி. 

மறைந்தும் மறையாத புகழோடு, இறந்தும் இறவாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பு காந்தியின் கொள்கைகளை கடைபிடிப்பதே நம் பொறுப்பு. முதல்வர் நாற்காலியில் அமர்ந்தும், பிரதமர் நாற்காலி தேடி வந்தும் அதனை விரும்பாதவர், பகட்டு வாழ்க்கைக்கும் பவுசு தரும் மரியாதைக்கும் மயங்காதவர், தமிழ்நாட்டை ஆண்ட தன்னிகரற்ற தலைவர் காமராஜரை போற்றுவோம்.

இதையும் படிக்க:தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்!