தமிழ்நாட்டை பிரிக்கும் ஆசை உண்டு – பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு

தமிழ்நாட்டை பிரிக்கும் ஆசை உண்டு – பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு

திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின், தனிநாடு கோரிக்கையை கையில் எடுக்க வைக்காதீர்கள் என்ற பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பல்லவநாடு, பாண்டிய நாடு என பிரிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத் தான் உள்ளது. அவ்வாறு பிரிக்கப்பட்டால் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுக்குள் முடிவு எடுத்துக்கொள்வோம் எனக் கூறினார். 


நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரித்தது போலவே தமிழ்நாட்டையும் இரண்டு மாநிலங்களாக பிரித்தால் வளர்ச்சி அடையும் எனக்குறிப்பிட்டார்.


தனிநாடு கோரிக்கைக்கு வித்திட்ட ஆ. ராசா:


நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஆ.ராசா, அனைத்து மாநிலங்களும் ஒன்றே என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒன்றுமை வேண்டுமெனில் இந்தி கற்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார். கட்சி நிறுவனர் தந்தை பெரியார் இறக்கும் வரை தனிநாடு கோரினார்.  ஆனால், நாங்கள் நாட்டின் ஒற்றுமையையும் மக்களாட்சியையும் கருத்தில் கொண்டு அக்கோரிக்கைக்கு புறம்பாக இருக்கிறோம் என பேசினார்.


கொங்கு நாடு யூனியன் பிரதேசம்: 


ஆ.ராசாவின் தனிநாடு கோரிக்கை தொடர்பாக தேசிய அளவில் சர்ச்சை எழுந்தது. தேசிய ஊடகங்கள் இது தொடர்பாக விவாதங்களை முன்னெடுத்தன. இந்த பின்னணியில் தான், பாஜகவின் நயினார்  நாகேந்திரன் பேசியதும் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில், மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற போது, கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டு மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பானது வெளியிடப்பட்டது. இது, 2021ல் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிர்வாக வசதிக்காக மேற்கு தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசி வந்தனர். இருப்பினும், தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. 


இதுவரை பிரிக்கப்பட்ட மாநிலங்கள்:


பாஜக ஆட்சியின் போது கடந்த 2000ல் இந்தியாவில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் படி, உத்தரப்பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்டும், பீகாரில் இருந்து ஜார்க்கண்டும், மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கரும் பிரிக்கப்பட்டன. இறுதியாக, கடந்த 2014 ஆம் ஆண்டு பெரும் போராட்டங்கள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதவாது, ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.