கண் பார்வையற்ற மழலைகளின் கோரிக்கை...உதவுவதற்கு முன்வருமா அரசு?

கண் பார்வையற்ற மழலைகளின் கோரிக்கை...உதவுவதற்கு முன்வருமா அரசு?

மயிலாடுதுறை அருகே இன்ஜினியர் ஆகவேண்டும், போலீஸ் ஆகவேண்டும் என கண்பார்வை இல்லாத மழலைகள் கனவுகளோடு காத்திருக்கின்றனர்.

சினிமா பாட்டுகளை பாடி அசத்தும் இந்த பொடிசுகளை கண்டால் எப்பேர் பட்டவரானாலும் ஒருகணம் மனம் இறங்கி கொஞ்ச தோன்றும். அந்த அளவிற்கு தங்களுடைய குறை தெரியாமல் முகத்தில் புன்னகையுடன் ஒன்றாக விளையாடும் இந்த பிஞ்சுகளுக்கு தான் எவ்வளவு பெரிய துன்பம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை மேலையூரில் வசித்து வருபவர்கள் ஆனந்தராஜ் - ரம்யா தம்பதி. இவர்களுக்கு 7 வயது ஆகும் மௌனிஷ்,  5 வயது ஆகும் ஆகாஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 

இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்த 3 மாதத்தில் கண்பார்வை குறைபாடுடன் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரு குழந்தைகளையும் மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, மதுரை அரவிந்தா கண்மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இதையும் படிக்க : கரும்பு கட்டுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி...!

அங்கு பரிசோதனை செய்ததில் கண்ணிற்கு செல்லும் நரம்புகள் நன்றாக உள்ளதாகவும், மூளைக்கு செல்லும் நரம்பில் பிரச்சனை உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், இதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தால் பார்வை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், ஏற்கனவே கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தாங்கள் எப்படி தொடர் சிகிச்சை அளிக்க முடியும் என மனமுடைந்துள்ளனர் அந்த ஏழை பெற்றோர்.

கூலி வேலைக்கு இருவரும் சென்ற நிலையில், கண்பார்வையில்லாத குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் ரம்யா நூறுநாள் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். 

மற்ற பிள்ளைகளைப்போல் தங்கள் இரண்டு பிள்ளைகளும் ஓடியாடி விளையாட வேண்டும், மற்ற மாணவர்களைபோல் தங்கள் மகன்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று கணவுகாணும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கண்பார்வை கிடைக்க அரசு உதவிசெய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.