”உண்மையான அதிமுக தாங்கள் தான்” உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த ஓ.பி.எஸ் தரப்பு!

”உண்மையான அதிமுக தாங்கள் தான்” உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த ஓ.பி.எஸ் தரப்பு!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். 

பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸை பதவி நீக்கம் செய்த ஈ.பி.எஸ்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக தற்காலிக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பி.எஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்தும் பதவி நீக்கம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களின் மோதல்:

இதனையடுத்து  சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் சென்றபோது, அவர்களை அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர்  ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு கற்களையும் எறிந்து மோதி கொண்டனர்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர்:

இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் அளித்த அறிக்கையின்படி, தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து இதில் சட்டஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது குறித்து வரும் ஜூலை 25 ஆம் தேதி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும்  ஆஜராகி விளக்கம் தருமாறு இரு தரப்பினருக்கும் வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஈ.பி,எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு:

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக தற்காலிக இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் விஜயநாராயணன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு முறையீடு செய்தனர். 

ஓ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு:

இதனைத்தொடர்ந்து தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும்  உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீடானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி அவசர வழக்காக இதனையும் விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்த நிலையில்,  மனுதாக்கல் நடைமுறை முடிந்தால் விசாரிப்பதாகவும், இல்லையென்றால்  நாளை விசாரிப்பதாகவும் நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஓ.பி.எஸ் தரப்பில் உண்மையான அதிமுக தாங்கள் தான் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.