அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்குகளும், பின்னணியும்?

அமைச்சர் செந்தில் பாலாஜி  மீது போடப்பட்ட வழக்குகளும், பின்னணியும்?

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இதுவரை போடப்பட்ட வழக்குகள் மற்றும் அதன் பின்னணி குறித்தான செய்தி:

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்த பணி நியமனங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட, துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். அதில் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

இதையும் படிக்க : கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்...!

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை...அனல் பறக்கும் கண்டனங்கள்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.  அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமலாக்கத் துறைக்கு கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்தது. 

இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, தற்போது கைது செய்துள்ளனர்.