"தந்தனத்தோம் என்று சொல்லியே.." என்று பாடிய கம்பீர குரலின் கலைப் பயணம்..!!

"தந்தனத்தோம் என்று சொல்லியே.." என்று பாடிய கம்பீர குரலின் கலைப் பயணம்..!!

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டின் மூலம் ஆன்மிகம், தேச பக்தியை பரப்பி வந்த கவிஞர் சுப்பு ஆறுமுகம் இன்று காலமானார். 

1928-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திரப் புதுக்குளத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம், நெல்லை மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் கல்வி பயின்றார். 

பின்னர் மதுரை தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்து, தமிழ் மொழியில் புலமை பெற்ற சுப்புஆறுமுகம் இளம் வயதிலேயே நூல் எழுதுவதை பழக்கமாக்கி கொண்டார்.  

11 வயதில் "குமரன் பாட்டு" என்ற நூலை எழுதிய சுப்பு ஆறுமுகத்தை பிரபல நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்துச் சென்றார். 

காந்தி மகான் கதையை 10 வருடங்களுக்கும் மேலாக  வில்லுப்பாட்டு மூலம் மக்களிடம் பரப்பி வந்தார் சுப்பு ஆறுமுகம். 

1960-ம் ஆண்டு "காந்தி வந்தார்" என்ற தலைப்பிலும், "கருணைக்கடல் காமாட்சி" என்ற தலைப்பிலும் ஆன்மிகம், தேசபக்தி இரண்டையுமே வில்லிசை மூலம் பாடி வந்தார். 

கோயில்கள், வானொலி, தொலைக்காட்சி என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களின் பெரு மதிப்பையும், பாராட்டுக்களையும் பெற்ற சுப்பு ஆறுமுகத்தின் புகழுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதையும், மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.  

"தந்தனத்தோம் என்று சொல்லியே.." என்று கம்பீரமான குரலில் பாடி வந்த சுப்புஆறுமுகம், வில்லிசை எனும் மாபெரும் மக்கள் கலையின் பெருந்தூணாக விளங்கினார்.

                                                                                                                                   -நப்பசலையார்

இதையும் படிக்க:   மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை....முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை!!!