அடுத்த குடியரசு துணைதலைவர் யார்? தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் !

அடுத்த குடியரசு துணைதலைவர் யார்? தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் !

குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையாநாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி  குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. 

இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் வருகிற ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் எனவும், வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 20 ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும், வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி தினம் ஜூலை 22 எனவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்த பிறகு அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இதனிடையே குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சி பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுவதால், இருவரும் தீவிரமாக தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். இந்த பின்னணியில் எதிர்க்கட்சிபொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, நாளை சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.