கலர் புடிக்கவில்லை என்று காரை மாற்றிய கேரள முதல்வர்

பாதுகாப்பு கருதி பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்ட கருப்பு நிற கார்...

கலர் புடிக்கவில்லை என்று காரை மாற்றிய கேரள முதல்வர்

பொதுவாக வாகனம் என்பது பயணிப்பதற்கான ஒரு கருவியாக கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அவை அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது. எனவே, ஒருவர் எந்த மாதிரியான காரை வைத்திருக்கிறார் என்பது தான் ஒருவரின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தில் வசிப்பவர்களுக்கே இவ்வகையான எண்ணம் இருக்கும்போது நாட்டை ஆளும் பிரதமருக்கும் முதலமைச்சர்களுக்கும் இருப்பது ஒன்றும் தவறில்லை. அப்படியே சொன்னாலும் பாதுகாப்பு காரணம் கருதி காரை மாற்றலாம், ஆனால் கலர் புடிக்கவில்லை என்பதற்காகவெல்லாம் காரை மாற்றுவது சரி என்று எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

சமீபத்தில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்650 கார்டு (Mercedes Maybach S650 Guard) காரை சமீபத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு 12 கோடி செலவிட்டு வாங்கியிருந்தது. இந்நிலையில்  கேரள முதல்வர் பினராயி விஜயனின் பயன்பாட்டிற்காகவும் தற்போது புதிய கார் வாங்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் பிரபலமான காராக உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது எம்பிவி ரகத்தை சேர்ந்தது.  கேரள முதல்வர் பினராயி விஜயனும் முதலில் வெள்ளை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை தான் பயன்படுத்தி வந்தார். ஆனால் வெள்ளை நிறம் அழுக்கு தாங்கவில்லை போலும் தற்போது அந்த வெள்ளை நிற காருக்கு பதிலாக கருப்பு நிற டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை அவரின் பாதுகாப்பு குழு வாங்கியுள்ளது. இதில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திய சம்பவம் என்னவென்றால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பயன்பாட்டிற்காக தற்போது வாங்கப்பட்டுள்ள நிறத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அதிகாரப்பூர்வமாக கிடைப்பதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்காக இந்த நிறத்தில் கார் பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. 

முதல்வரின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவின் முன்னாள் டிஜிபியாக இருந்த லோக்நாத் பெஹரா அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பினராயி விஜயன் தற்போது புதிய கருப்பு நிற காரை பயன்படுத்த தொடங்கியிருப்பதாக தெரிகிறது. கேரள முதல்வரின் பாதுகாப்பு காரணம் கருதி அவரின் அதிகாரப்பூர்வ கார் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றப்படும் என கேரள காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாகதான் தற்போது கார் மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் படையில் மொத்தம் 4 கார்கள் உள்ளன. இதில், 3 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களும், ஒரு டாடா ஹாரியர் காரும் அடங்கும். இந்த நான்கு கார்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மட்டுமே கருப்பு நிறத்தில் உள்ளது. மீதமுள்ள கார்கள் வெகு விரைவில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளன. இந்த மாற்றங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே 63 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

பொதுவாக கருப்பு நிறம் என்பது கெட்ட சகுனத்தை குறிக்கும் என்பதால் பலர் கருப்பை விரும்ப மாட்டார்கள். ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளை நிற காரில் இருந்து கருப்பு நிற காருக்கு மாறியுள்ளது பல விமர்சனங்களுக்கு வழிவகுத்து வருகிறது. பினராயி விஜயன் மட்டுமல்லாது இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும், ஏன் உலக தலைவர்களும் கூட கருப்பு நிற கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி பலர் கருப்புநிற கார்களை பயன்படுத்துவது பாதுகாப்பு காரணத்தை கருதி தான். ஏனெனில் தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் இரவு நேரங்களில்தான் நடைபெறும் ஆனால் கார் கருப்பு நிறத்தில் இருந்தால் இரவு நேரங்களில் கருப்பு நிறம் பார்வைக்கு புலப்படுவது மிகவும் கடினமான ஒரு விஷயம். இதன் மூலம் இரவு நேரங்களில் அரசியல் தலைவர்களின் கார்களுக்கு அச்சுறுத்தல் குறையும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் எனவே பெரும்பாலான தலைவர்களின் கார்கள் கருப்பு நிறத்தில் உள்ளது.

இதை தவிர்த்து கருப்பு என்பது அதிகாரத்தின் நிறமாக கருதப்படுவதாலும் பல தலைவர்கள் கருப்பு நிறத்தை விரும்புகின்றனர் என்ற ஒரு கருத்தும் எழுந்து வருகிறது. ஆனால் அரசியல் தலைவர்களை தவிர்த்து விட்டு பார்த்தால், இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான கார் வண்ணமாக இருப்பது என்னவோ வெள்ளைதான். இந்திய சாலைகளில் அதிகமாக  வெள்ளை நிற கார்களைதான் பார்க்க முடியும். அரசியல்வாதிகள் பலரும் கூட வெள்ளை நிற கார்களை அதிகமாக பயன்படுத்துவதற்கு காரணம் வெள்ளை என்பது தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுவதால் தான். இந்தியா மட்டுமல்லாது உலகில் பல்வேறு நாடுகளிலும் அதிகம் விற்பனையாகும் காராக வெள்ளை நிற கார்கள் தான் உள்ளது.