12 இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு...சிக்குகிறார்களா சோனியா, ராகுல்!!!

12 இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு...சிக்குகிறார்களா சோனியா, ராகுல்!!!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அதன் பத்திரிக்கை அலுவலகம் மற்றும் அது சம்பந்தமான டெல்லியின் பல்வேறு இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு:
 
நேஷனல் ஹெரால்டு 1938 இல் ஜவஹர்லால் நேரு பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து நிறுவினார். இது இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்  மூலம் வெளியிடப்பட்ட இந்த செய்தித்தாள் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக மாறியது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் ஹிந்தி மற்றும் உருது மொழிகளிலும் மேலும் இரண்டு செய்தித்தாள்களை வெளியிட்டது. 2008ல் ஏற்பட்ட 90 கோடி ரூபாய் கடனால் செய்தித்தாள் நிறுத்தப்பட்டது.

ஹெரால்டு டூ யங் இந்தியா:

யங் இந்தியா லிமிடெட் 2010 இல் நிறுவப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல் காந்தி அதன் இயக்குநராக இருந்தார். நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் வைத்திருந்தனர். மீதமுள்ள 24% காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு சொந்தமானது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்  ஜவஹர்லால் நேருவின் சிந்தனையில் உருவானது. 1937 இல், நேரு 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களை அதன் பங்குதாரர்களாக கொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் குறிப்பிட்ட எந்த நபருக்கும் சொந்தமானது அல்ல. 2010 இல், நிறுவனம் 1,057 பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்ததால் அதன் பங்குகள் 2011 இல் யங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு மோசடி:

2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை பெறுவதற்காக, செயலிழந்த அச்சு ஊடகத்தின் சொத்துக்களைத் தவறான வழிமுறையில் யங் இந்தியா லிமிடெட் கையகப்படுத்தியது என்று சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்துள்ளார்.
 
இந்த வழக்கில் பணமோசடி நடந்துள்ளதா என 2014ல் அமலாக்க துறை விசாரணை நடத்தியது. 18 செப்டம்பர் 2015 அன்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறை தனது விசாரணையை மீண்டும் தொடங்கியதாகத் தெரிவித்தது.

சோனியா ராகுலிடம் விசாரணை:

இது தொடர்பான விசாரணை ராகுல் காந்தியிடம் 5 நாள்களும் சோனியா காந்தியிடம் 2 நாள்களும் நடைபெற்றது. அமலாக்க துறையின் விசாரணையின் போது  ​​பத்திரிகையின் செயல்பாடு அதன் பல்வேறு அலுவலகப் பணியாளர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்பபட்டிருந்ததாக தக்வல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பங்கு மற்றும் ஈடுபாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


சோனியாவை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து  மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர், ப.சிதம்பரம்,  உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதே போல் டெல்லியின் பல இடங்களில்  காங்கிரஸ் சார்பில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்தியா முழுவதும் சோனியா, ராகுல் மீதான விசாரணை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது.

அமலாக்க துறை சோதனை:

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள  நேஷனல் ஹெரால்டு நாளிதழின் அலுவலகம் உள்பட மொத்தம் 12 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் இடைக்கால தலைவர்சோனியா காந்தி அமலாக்க துறையால் விசாரணை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.