சந்திரயான் குறித்த சர்ச்சை பதிவால், கண்டன மழையில் நனையும் பிரகாஷ் ராஜ்... மாட்டிகிட்டாரா?

சந்திரயான் குறித்த சர்ச்சை பதிவால், கண்டன மழையில் நனையும் பிரகாஷ் ராஜ்... மாட்டிகிட்டாரா?

சந்திரயான் குறித்த சர்ச்சை பதிவால், முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ் பல தரப்பில் இருந்தும் கண்டனங்களை பெற்று வருகிறார்.

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ மற்றும் சந்திரயான் -3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நாடு மக்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மற்றொரு பக்கம் இது குறித்த சர்ச்சைகளும் எழும்பியுள்ளன. சந்திரயான் 3 நிலவில் இறங்குவதற்கு முன், திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதாவது, சந்திரயான் நிலவில் கால் பதித்ததும், முதலில் இந்த புகைப்படத்தை தான் அனுப்பும் என,' டீ ஆற்றும் டீ கடைக்காரர்' புகைபடத்தை கோர்த்து பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு, சர்ச்சையான நிலையில், விஞ்ஞானிகளின் தியாகத்தை பிரகாஷ் ராஜ் கொச்சை படுத்துவதாக, பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழும்பியது. அதற்க்கு பதிலளிக்கும் வகையில், "இந்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சனை. வளருங்கள்." என மீண்டும் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.

இதன் எதிரொலியாக, கர்நாடகாவை சேர்ந்த இந்து அமைப்பினர் பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகார் மனுவை ஏற்று, பாகல்கோட் மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதே போல், தமிழ்நாட்டின் திருச்செந்தூரில், இந்து முன்னணியினர் பிரகாஷ்ராஜ் படத்தை செருப்பால் அடித்து, காலால் மிதித்து, கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து, பிரகாஷ் ராஜை கைது செய்யக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கிய போது, அதனை பாராட்டி, இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு வழிகாட்டட்டும்” என பதிவிட்டுள்ளார்.