சாதி குறித்த சர்ச்சை கேள்வி: அறிக்கை வெளியிட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகம்...!

சாதி குறித்த சர்ச்சை கேள்வி: அறிக்கை வெளியிட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகம்...!

பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில்,  எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டதையடுத்து, பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த கேள்விக்கும், பெரியார் பல்கழைக்கழகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் எம்.ஏ பாடப்பிரிவு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதில் எம்.ஏ வரலாறு பாடப்பிரிவு 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர்களுக்கு சாதி பற்றி வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில்  சில சாதி பெயர்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி எனவும் கேட்கப்பட்டிருந்தது.  

சாதி கேள்வியால் எழுந்த சர்ச்சை:

தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் இக்கேள்வி இடம் பெற்ற நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில்,  சாதிகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்புவதா எனவும் சர்ச்சை வெடித்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதன் விளக்கம்:

இப்படி பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த கேள்வி குறித்து அப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதன் விளக்கம் அளித்தார். அதில், தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்படவில்லை என்றும், பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டவை எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்து பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து  உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ள அவர், மறு தேர்வு நடத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் எனவும் கூறினார். 

பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய  வினா மூலம் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் மன வருத்தத்தை பதிவு செய்து கொள்வதாக த்ற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பெரியார் பல்கலைக்கழகத்தில்  சாதி குறித்து கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி விவகாரத்தில், பல்கலைக்கழகத்திற்கு எந்த விதமான உள்நோக்கமும் நேரடியான தொடர்போ இல்லை  என்றும், இந்த சர்ச்சைக்குரிய  வினா மூலம் பொது மக்களுக்கும்,மாணாக்கர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் மன வருத்தத்தை பதிவு செய்து கொள்வதாகவும், மேலும் இதுபோன்று  தேவையற்ற கேள்விகள் இனி வினாத்தாளில் இருக்காது எனவும் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.