அதிமுக தலைமை என்னை என்ன செய்யும்? சசிகலாவுடன் உரையாடிய புலமைப்பித்தன்!!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் - புலமைப்பித்தன்

அதிமுக தலைமை என்னை என்ன செய்யும்? சசிகலாவுடன் உரையாடிய புலமைப்பித்தன்!!

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அதிமுக மூத்த தலைவர் புலமைப்பித்தன் தெரிவித்திருப்பது தலைமை கதிகலங்க வைத்துள்ளது. 

1968-ம் ஆண்டு குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் நான் யார் என்ற பாடல் எழுதியதின் மூலம் புகழ்பெற்றவர் பாடலாசிரியர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும், சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் எம்.ஜி.ஆரால் அரசவைக் கலைஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரோடு சேர்ந்து 1972-ல் அ.தி.மு.க.வை உருவாக்கியவர்களில் ஒருவரான இவர் எழுதிய நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கிறது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடலாசியராக பணியாற்றிய இவர், தற்போது அதிமுகவை விமர்சித்து தொலைக்காட்சிகளில் பேசி வருகிறார். 

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா எனவும், அவர் தான் இன்னும் அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை இழந்துள்ள இந்த சூழலில் கட்சியை வலுப்படுத்த சசிகலாவால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ள புலமைப்பித்தன் சமீபத்தில் சசிகலாவுடன் தொலைப்பேசியில் உரையாடியது குறிப்பிடத்தக்கது.        அவ்வாறு தொலைப்பேசியில் உரையாடிய போது, உங்களோடு பேசிய அதிமுக நிர்வாகிகளை தலைமை கட்சியிலிருந்து நீக்கி வருவதை சுட்டிக் காட்டிய அவர், நானும் தற்போது உங்களோடு பேசியுள்ளேன், தற்போது என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என கூறியுள்ளார்.

இதனால் மேலும் குழப்பத்திற்கு சென்றுள்ள அதிமுக தலைமை, புலமைப்பித்தனை கட்சியிலிருந்து நீக்குமா? அல்லது தங்கள் பக்கம் பேசக் கூறி கெஞ்சுமா? என்பது போக போகத் தான் தெரியும்.