#EXCLUSIVE | உதயநிதியின் அமைச்சர் பதவி..! வாரிசுக்கு கிடைத்த வாய்ப்பா? உழைப்புக்கு கிடைத்த பரிசா?

திமுகவின் தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை.

#EXCLUSIVE | உதயநிதியின் அமைச்சர் பதவி..! வாரிசுக்கு கிடைத்த வாய்ப்பா? உழைப்புக்கு கிடைத்த பரிசா?

தயாரிப்பு நிறுவனம்

உதயநிதி சொந்தமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கினார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியே அதே ஆண்டில் நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை வைத்து குருவி படத்தை தாயாரித்து முதன்முதலில் கலைத்துறையில் அடி எடுத்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். அதனை தொடர்ந்து ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு போன்ற படங்களை தயாரித்தார்.

அடுத்த பரிணாமம்

தனது தாத்தா கருணாநிதியை போன்றும், தந்தை மு.க.ஸ்டாலினைப் போன்றும் சினிமா - அரசியல் என இரண்டிலுமே கால் பதித்திருக்கிறார் உதயநிதி. ஆரம்ப காலங்களில் தமிழ் திரைப்படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வந்த உதயநிதி பின்னாளில் நடிகராக பரிணமித்தார்.

நாயகனான உதய்

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தை தயாரித்த உதயநிதி, அப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன், மனிதன் போன்ற படங்களை தாயாரித்தும், நடித்தும் வந்தார்.

உதயநிதி நடித்த மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கத் தொடங்கினார். தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்திருக்கும் "மாமன்னன்" திரைப்படமே தனது இறுதியான படம் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி அரசியல் வருகை

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராகவும், நடிகராகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 மார்ச் முதல் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார் உதயநிதி.

நாடாளுமன்ற தேர்தலும் உதயநிதியும் 

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் படி  ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார் உதயநிதி ஸ்டாலின். மக்களிடையே   கலந்துரையாடிய உதயநிதியின் இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெற்றிப் பெற்றனர். அந்த மகத்தான வெற்றிக்கு உதயநிதி மேற்கொண்ட தேர்தல் பரைப்புறையும் ஒரு முதன்மையான காரணம்.

கழகத்தில் பொறுப்பு

கடந்த ஜூலை 4, 2019ஆம் ஆண்டு, திமுகவின் இளைஞர் அணி செயலாளராக முதன்முதலில் நியமிக்கப்பட்டார் உதயநிதி. இவர் பொறுப்பேற்ற போது திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லை, எனினும் இளைஞர் அணியினரைக் கொண்டு மக்கள் பணிகளைச் செய்ய முடிவெடுத்து, மாநிலம் முழுவதும் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் திமுக இளைஞர் அணியினரால்  தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நீட் தேர்வு போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணியுடன் இணைந்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்தார் உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வால் உயிரிழந்த அறியலூரை சேர்ந்த அனிதாவின்  நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று  தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும், நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். மேலும், வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் நீட்டிற்கு எதிரான தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் உதயநிதி.

#கொரோனா கால மக்கள் பணி

கொரோனா கால ஊரடங்கின் போது வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட திமுக  இளைஞர் அணி சார்பாக அனைத்து முக்கிய நிர்வாகிகளின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, உதவித் தேவைப்படுவோர் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் மருந்துகள், உணவுப் பொருட்கள் கேட்டு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்த நிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஊரடங்கையும், கொடிய நோயையும் பொருட்படுத்தாது மக்கள் பணியை திறம்பட செய்தனர்.

உதயநிதியின் இந்தி எதிர்ப்பு

இந்தித் திணிப்பு மற்றும் இந்தியா முழுவதும் ஒரே தேர்வு என மாநில மொழி மற்றும் கல்வி உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். பல்லாயிரம் இளைஞர்களும், மாணவர்களும் இந்தி எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிற வைத்த ஒற்றை செங்கல் பிரச்சாரம்

தனது இயல்பான பேச்சின் மூலம்  சட்டமன்றத் தேர்தலில் போது இவர் செய்த பிரச்சாரங்கள் அனைவரையும் கவர்ந்தது, அதில் ஒன்று ‘ஒற்றைச் செங்கல்’ பிரச்சாரம். மதுரையில் பிரதமர் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்" என்று கூறி மக்களிடம் ஒரு செங்கலை காட்டினார். உதயநிதியின் இந்த பிரச்சாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பெரியளவில் டிரெண்டும் ஆனது.

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதன்முறை சட்டமன்ற உறுப்பினரானார் உதயநிதி. அவர் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான நேரம் கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் நலிவடைந்து பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர். அப்போது தன் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கியதோடு, கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தன் தொகுதி மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிபடுத்தினார்.

கழிவறையை தூய்மைப்படுத்துதல்

பொதுவாக, பொதுகழிப்பிடம் என்றாலே முகம் சுழிக்கும் அளவிற்கு தான் இருக்கும் அப்படிப்பட்ட கழிவறைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை உடனடியாக சீர் செய்ய உத்தரவிட்டதோடு மட்டும் நிறுத்தாமல், மீண்டும் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொண்ட உதயநிதி, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இளைஞர் பயிற்சி பாசறை

திமுகவின் இளைஞரணி செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுபேற்றதிலிருந்து மக்கள் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவரின் செயல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’.

திராவிட முன்னேற்ற கழகத்தினால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் மற்றும் கட்சி முன்னோடிகளின் உழைப்பு மற்றும் கட்சியை வளர்க்க அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்து கட்சியில் உள்ள  இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ கூட்டங்களை தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடத்திக் காட்டியது கட்சியில் உள்ள முன்னோடிகளையே வியக்க வைத்தது.

மேலும் படிக்க: அம்பேத்கரின் கோட்டு சூட்டும்.. அதை பற்றிய காந்தியின் கணிப்பும்..!

முன்மாதிரியாக செயல்படும் உதயநிதி

தனது தொகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க உதவும் வகையில் இலவச இணைய வசதியை (Free WiFi) ஏற்படுத்தித் தந்துள்ளார் உதயநிதி. அதேப் போன்று தொகுதிக்கென்று பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கியதன் மூலம் தொகுதியில் ஏற்படும் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாக தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தன் தொகுதி மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியும், சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும் உதயநிதியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

தந்தை மகற்காற்றும் நன்றி - மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி

"தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் நிறைந்த அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதல்" என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப தனது மகன் உதயநிதியை சான்றோர்கள் சூழ்ந்த சபையில் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு தந்தைக்கான கடமையை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார், ஒரு மகனாக அவரது எதிர்பார்ப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி "இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு" என்ற பெருமையை தன் தந்தைக்கு பெற்று தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாண்புமிகு அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்! - ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் மற்றும் அமைச்சர்கள் சூழ ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க மாண்புமிகு அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் குறுகிய காலத்திலேயே திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று அசுர வளர்ச்சி அடைந்து கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் சிறந்து செயல்பட்டு வந்தாலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வரும் நிலையில், அதற்கெல்லாம் தனது உழைப்பின் மூலம் பதில் அளிப்பேன் என்று உறுதியாக கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

நற்செயலில் நாட்டம் கொண்டவர்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் - திருக்குறள்

நன்மை எது? தீமை எது? என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள் - கலைஞர் உரை

இக்குறளுக்கு எடுத்துக்காட்டாய் "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை" அமைச்சராக பதவியேற்றிருக்கும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பணி சிறப்புற அமைய வாழ்த்துகள்..!

 - அறிவுமதி அன்பரசன்