"மார்ச் 8".. இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

"மார்ச் 8".. இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.

"மார்ச் 8".. இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

மார்ச். 8.. மகளிர் தினம்.. உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் இனத்தினால், மதத்தினால், தேசம் ரீதியாகவும் பல்வேறு பிரிவுகளை வைத்தும் வேறுபடுத்தப்படுதுண்டு. ஆனால் அனைவருக்குமே பொதுவான ஒன்றாக, அனைத்து மதத்தினரும், இனத்தினரும், பல்வேறு பிரிவினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் பெண்மை.. தாய்மை.

மனிதர்களையும் தாண்டி, விலங்குகள் பறவைகளிடத்திலும் நிறைந்து காணப்படும் இந்த தாய்மையை கொண்டுள்ள பெண்களே இந்த உலகத்தில் கண்ணுக்கு தெரிந்த கடவுளாவார்கள். படைத்தவனைத்தான் கடவுள் என்று போற்றப்படுவதுண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைக் கூட கையெடுத்து கும்பிடுவது பெண்மையைத்தான். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். 

உலகெங்கும் கொண்டாடப்படும் ஒவ்வொரு சிறப்பு நாளுக்கும் ஒரு வரலாறு இருப்பதை மறுத்து விட முடியாது. 1909-ம் ஆண்டில் இருந்தே உலகின் பல்வேறு மூலைகளிலும் பெண்களுக்கான சமத்துவம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கி விட்டன.  ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தால் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்து காரசார விவாதங்கள் நடந்து வந்தன. மேலும் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இந்த உரிமைகளை ஏற்பதற்கு தயாராக இருந்திருக்கவில்லை. 

1910-ம் ஆண்டு உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் கிளாரா ஜெட்கின் என்பவர் உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அந்த மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சோசலிச பெண்களின் இரண்டாவது மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல் 1911-ம் ஆண்டில் இருந்தே கொண்டாட்டம் தொடங்கியது. ஆனால் இந்த மகளிர் தினம் கொண்டாடுவதற்கு முதலில் மார்ச் 19-ம் நாள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1911-ம் ஆண்டு  கொண்டாடப்பட்ட இந்த மகளிர் தினம், 1913-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதே நாள் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாகவும் எண்ணிப்பார்க்கப்படுகிறது. பெண்களின் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற கிளாரா செட்கின் என்பவரையும் இதே நாளில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். உலகிற்காக பல தியாகங்களை மேற்கொள்ளும் பெண்ணானவள், குடும்பத்திற்காக மெழுகாய் எரிகிறாள். பெண் என்பவள் போகத்துக்கும், மோகத்துக்கும் மட்டுமே உடையவள் அல்ல. பெண் என்பவள் போற்றுதலுக்கு உடையவள். மரியாதைக்கு உரியவள். மாண்புக்குரியவள். யாராலும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பெருமைக்கு உரியவள். பெண்மையை தூக்கி வைத்து கொண்டாடுவது என்பதையும் தாண்டி, அவளது உணர்வுகளை மதித்து நடப்பதே பெண்மைக்கு வழங்கப்படும் மரியாதையாகும். இந்த ஒரு நாள் மட்டும்தான் பெண்மையை பாராட்டுவது என்றும் ஆகி விடாது. தன்னைப் போல, தன் தாயைப் போல தன் சகோதரியைப் போல ஒவ்வொரு பெண்ணையும் நினைத்து விட்டாலேயே இந்த சமுதாயம் சீர்பட்டு விடும் என்பது ஐயமில்லை.