ஜூலை 18 : மறைந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த தினம்...தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!

ஜூலை 18 : மறைந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த தினம்...தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!

காவிரி பிரச்சனைக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று...

தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 18 -ல் தமிழ்நாடு நாள் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால், அதேதேதியில் இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. 

1993 ஜூலை 18 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய தினம் பகல் 9.15 மணியளவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றவர், திடீரென சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து உண்ணாரவிரதப் போராட்டத்தை துவங்கினார். யாரிடமும் ” தான் இப்படி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என்று எந்தஒரு அறிவிப்பும் தெரிவிக்காமலேயே போராட்டத்தை தொடங்கினார். 

திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் மெரினாவில், அதுவும் கொளுத்தும் வெயிலில் முதலமைச்சர் அமர்ந்திருப்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பதறி அடித்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடோடி வந்தனர். இவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தமிழக மக்கள் அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து கடற்கரைக்கு வந்தடைந்த அதிகாரிகள், மொட்டை வெயிலில், வெறும் தரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்த காட்சியை கண்ட  கட்சியினரும், அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். உடனே, சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் பந்தல், மேடை அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். இந்த சூழ்நிலையிலும் தனது கடமையிலிருந்து தவறாத மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பணியினை உண்ணாவிரதப் போராட்ட பந்தலில் இருந்தவாறே செய்து வந்தார். கோப்புகள் பார்ப்பது, அரசு அதிகாரிகளை சந்திப்பது என அப்படியே மெரீனா கடற்கரையில் ஓரிரு நாட்கள் கடந்தது. 

இதையும் படிக்க : தமிழ்நாடு நாள் ஜூலை 18 கடந்து வந்த வரலாறு...!

இதனிடையே, ஒரு மாநில முதலமைச்சர் கடற்கரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகவல் அப்போதைய புதுச்சேரி ஆளுநர் சென்னா ரெட்டிக்கு சென்றதும், உடனடியாக சம்பவ இடத்திற்கு பறந்து வந்து ஜெயலலிதாவுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசிய அவர், போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டார். ஆனால், ”தமிழகத்திற்குக் காவிரி நதிநீர் வரும்வரை நான் உண்ணாவிரதம் கைவிட மாட்டேன்" என்று விடாப்படியாக கூறி மறுத்துவிட்டார்.

இப்படியாக ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக ஜூலை 20 ஆம் தேதி‌யும் தொடர்ந்தது. அப்போது அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினர். இந்த செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் ஒரே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து காணப்பட்டது.

இதற்கிடையில், மத்திய உளவு அமைப்புகளின் தகவல்களை கேட்டறிந்த  அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், பதறிப்போய் அவசர அவசரமாக  ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சி.சுக்லாவை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். 

இந்நிலையில் நான்காவது நாளான ஜூலை 21ஆம் தேதியும் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்துப் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சி.சுக்லா, அடுத்த நாள் அதாவது ஜூலை 21ஆம் தேதி சென்னை வந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது, "காவிரி நீர்ப் பங்கீடு சார்பாக இரண்டு கமிட்டிகள் அமைத்து சரியான முடிவு எடுக்க, நீர்ப் பங்கீடு கண்காணிக்கப்படும்" எனக் கூறி உறுதி அளித்தார். 

மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் உறுதியை ஏற்ற ஜெயலலிதா, அன்று மாலை உண்ணாவிரதத்தை பழச்சாறு அருந்தி கைவிட்டார். அன்றுமுதல் இது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவே இன்றுவரை கருதப்படுகிறது...தொடர்ந்து காவிரி நீருக்காக 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மத்திய அமைச்சரின் உறுதியை பெற்றதன் காரணமாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, தமிழக வேளாண் குடி மக்கள் பாராட்டு விழா நடத்தி, காவிரித்தாய் என்று புகழாரம் சூட்டினர்...

எனவே, ஜூலை 18 வெறும் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல, இது தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்றும் சொல்லலாம்...