புதுச்சேரி ஆளுநர் ஆகிறார் முன்னாள் டிஜிபி திரிபாதி..!

புதுச்சேரி யூனியனுக்கு புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி ஆளுநர் ஆகிறார் முன்னாள் டிஜிபி திரிபாதி..!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான அவர் திகார் ஜெயிலில் தலைமை அதிகாரியாக இருந்த நேரத்தில் ஜெயில் நடவடிக்கைகைகளை முற்றிலும் மாற்றி அமைத்து, மன இறுக்கத்தில் இருந்த கைதிகளை மகிழ்ச்சியாக இருக்க செய்யும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். 
 
புதுவையின் ஆளுநராக பதவி ஏற்ற பிறகு  ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எல்லா துறைகளிலும் தன் கவனத்தை செலுத்தினார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போதே தன்னிச்சையாக பல உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் அவருக்கும் முதல் அமைச்சருக்கும் மோதலை ஏற்படுத்தியது. கிரண்பேடி ஆளுநராக இருந்தவரையில் புதுச்சேரி போர்க்களமாகவே இருந்தது. முதலமைச்சர் நாராயணசாமியின் கடுமையான எதிர்ப்பால் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
புதுச்சேரி யூனியன் தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா ஆளுராக இருக்கும்  தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நாராயணசாமியின் அமைச்சரைவை கவிழ்ந்து, சட்டமன்ற தேர்தலில்  வெற்றி பெற்று ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதெல்லாம் எல்லாம் வேறுகதை.
 
இந்நிலையில், புதுச்சேரிக்கு புதிய துணை நிலை ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கிரண்பேட்டியை போன்றே தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பீகார் மாநிலத்தை சேர்ந்த தமிழக முன்னாள் டிஜிபி திரிபாதி. இவர் கடந்த 30ஆம் தேதி பணி ஓய்வு பெற்று அந்த தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைநேதிரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
காவல்துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் திரிபாதி, ஐபிஎஸ். பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்பும் திரிபாதி மீது மத்திய அரசு அதிகாரிகள் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள்.
 
இந்த நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் உள்ள பதவிக்கு திரிபாதியை நியமிக்க பிரதமர் அலுவலகம் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் நியமிக்கலாமா என்ற விவாதமும் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
 
ஒரு மாநிலத்தை சேர்ந்தவரை அதே மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க முடியாது. திரிபாதியின் பூர்விகம் பீகார் என்பதாலும், அவர் தமிழ்நாட்டில் பணியாற்றியவர் என்பதாலும், அவரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்க தடை இல்லை என்பதால் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 
 
தனது நேர்மையால் மத்திய அரசின் கவனத்தில் உள்ள திரிபாதிக்கு ஊழல் தடுப்பு ஆணைய உறுப்பினர் பதவி கிடைக்குமா அல்லது துணை நிலை ஆளுநர் பதவி கிடைக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.