இதில் யார் ரீல் ஹீரோ , யார் ரியல் ஹீரோ

பலகோடி கொடுத்தும் தரம் குறைந்த பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க திரைப்பிரபலங்கள் சிலர் மறுத்துள்ளனர்.

இதில் யார் ரீல் ஹீரோ , யார் ரியல் ஹீரோ

திருப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய வேட்டி நிறுவனம் ராஜ்கிரணை தனது விளம்பர படத்தில் நடிக்க கேட்டது. சம்பளம் ஒரு கோடி கொடுப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது. ஆனால் கடன் சுமைகள் இருந்தபோதும் ராஜ்கிரண் அந்த கம்பெனி பக்கம் திரும்பி பார்க்கவில்லை, அந்த நிறுவனத்திற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? எனக்கு கொடுக்கும் சம்பளத்தை, நீங்கள் மீட்க என் சகோதரன் வாங்குற வேட்டியில் தான் அதிக விலை வைத்து விற்பனை செய்வீர்கள். வேட்டி கட்டத் தெரிஞ்சவங்களுக்கு நல்ல வேட்டி எது என்று பார்த்து வாங்கவும் தெரியும் என்று அந்த வேட்டி நிறுவனத்திடம் கர்வமாக ராஜ்கிரன் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாவதா நடிகை சில்க் ஸ்மிதாவை ஒரு சோப்பு நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிக்க அழைத்தது. 

அதற்கு அவர் "உங்க சோப்பை கொடுங்கள், நான் ஒரு மாதம் வரை உபயோகித்து பார்த்துவிட்டு அப்புறம் நடிக்கிறேன்" என்றார்.  ஒரு வாரத்திலேயே சோப்பை அந்த கம்பெனி முகத்தில் விட்டெறிந்து விட்டு "வேற ஆளப் பாருங்க"ன்னு சொல்லிவிட்டாராம்.

மலையாள நடிகை பார்வதியிடம் ஒரு சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். கருப்பு அழகில்லை என்று கூறும் உங்களின் கொள்கையை தான் மறுப்பதாக அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் பார்வதி.

இதுதான் நிஜ ஹீரோக்களின் கதை. ஆனால் சில ஹீரோக்கள் படத்தில் ஊருக்கு உபதேசம் செய்து விட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டு, வான்கோழி வளர்ப்பு, கொள்ளை அடிக்கிற ரியல் எஸ்டேட் கம்பெனிகள், ஆஸ்பத்திரிகளுக்கு கியாரண்டி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நடிகர் நகை வாங்கச் சொல்வார், இன்னொரு நடிகர் அதை அடகு வைக்கச் சொல்வார்கள் 

ஆனால் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவரின் எதிரில் வைத்திருந்த கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து "வாட்டர் குடிங்க" என்றார். இந்த  வீடியோ இணையத்தில் வைரலானது. ரொனால்ட்டின் இந்த 5 விநாடி வீடியோவால் கோகோ கோலாவின் ஷேர் மார்க்கெட் சரிந்து கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது அந்த நிறுவனம்.

திரையில் நடிப்பவர்களல்ல ஹீரோக்கள், தரையில் நிமிர்ந்து நடப்பவர்களே ஹீரோக்கள்...!