வாழ்த்து மழையில் நனைந்த அமைச்சர் உதயநிதி...!

வாழ்த்து மழையில் நனைந்த அமைச்சர் உதயநிதி...!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அமைச்சரான உதயநிதி:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, இன்று காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்:

இதையடுத்து உதயநிதி அமைச்சரானதை பாராட்டி, அரசியல் தலைவர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

வைரமுத்து:

அதன்படி, கவிஞரும் பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து, 
உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான்...

இன்னொரு முகம் இருக்கிறது;அறிவு முகம்;செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக; தமிழர்க்கு மேன்மை தருக;

அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்” என கூறி அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனிமொழி வாழ்த்து:

”இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து:

அமைச்சரான உதயநிதிக்கு, “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்; அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளதுஎன்று கூறி நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து:

”தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ்:

”இன்று தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் எங்கள் மரியாதைக்குரிய உதயநிதி சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும் - மாமன்னன் படக்குழு” என்று மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வாழத்து தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா:

”அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும்  அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!” எனக்கூறி அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் ப்ரியா வாழத்து தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ட்வீட்:

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கழக இளைஞரணி செயலாளர் திருமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அளவில்லா அன்பும் மனமார்ந்த வாழ்த்துகளும்...” எனக்கூறி அமைச்சர் உதயநிதிக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.